கூலி ; 5-வது நாளில் கடுமையாக சரிந்தது வசூல்…

2025-ம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக கூலி வெளியானது. லோகேஷின் முந்தைய படங்களைப் போலவே முதல் நாள் காட்சிகளுக்குப் பிறகு கூலிக்கும் கலவையான விமர்சனங்களே கிடைத்தன.
இருப்பினும், முன்பதிவுகள் அதிகமாக இருந்ததால் கூலி படம் முதல் நாள் வசூல் சாதனை படைத்தது. அதன்படி இப்படம் முதல் நாளே ரூ.151 கோடி வசூலித்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.
இதன்மூலம் முதல் நாளில் அதிக வசூல் அள்ளிய தமிழ் படம் என்கிற சாதனையையும் கூலி படைத்தது.
கூலி படம் ஆகஸ்ட் 14ந் தேதி ரிலீஸ் ஆனது. இதையடுத்து வந்த மூன்று நாட்களும் விடுமுறை நாட்கள் என்பதால் இப்படத்திற்கு டிக்கெட் முன்பதிவுகள் அதிகமாக இருந்தன. இதனால் முதல் நான்கு நாட்களின் வசூல் தாறுமாறாக இருந்தது.
சன் பிக்சர்ஸ் நிறுவனமே கூலி படத்தின் நான்கு நாட்களுக்கான வசூல் நிலவரத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அதன்படி இப்படம் நான்கு நாட்களில் உலகளவில் 404 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
தமிழ் சினிமா வரலாற்றில் மிக வேகமாக 400 கோடி வசூலைக் கடந்த தமிழ் படம், என்கிற சாதனையை கூலி படைத்துள்ளது.
வார இறுதி நாட்களில் வசூல் ராஜாவா இருந்த கூலி படம், வார நாட்களில் வசூலில் கடும் சரிவை சந்தித்து உள்ளது. இப்படம் நேற்று திங்கட்கிழமை உலகளவில் வெறும் ரூ.18 கோடி மட்டுமே வசூலித்து உள்ளது. இது முந்தைய நாள் வசூலில் பாதி கூட இல்லை.
கூலி படம் ரிலீஸ் ஆனதில் இருந்து மிகக் குறைவாக வசூலித்தது நேற்று தான். அதில் இந்தியாவில் மட்டும் இப்படம் ரூ.12.78 கோடி வசூலித்திருக்கிறது. இப்படத்தின் தமிழ் பதிப்பு ரூ.7.8 கோடியும், தெலுங்கு வெர்ஷன் ரூ.2.82 கோடியும், இந்தி வெர்ஷன் ரூ.1.98 கோடியும், கன்னட பதிப்பு ரூ.18 லட்சமும் வசூலித்திருக்கிறது. இதன்மூலம் ஐந்து நாட்களில் இப்படம் உலகளவில் ரூ.422 கோடி வசூலித்திருக்கிறது.
இதே நிலை நீடித்தால் கூலி படம் வசூலில் ஜெயிலர் பட சாதனையை முறியடிப்பதே சந்தேகம் தான் என கூறப்படுகிறது. ஜெயிலர் படம் பாக்ஸ் ஆபிஸில் 650 கோடிக்கு மேல் வசூலித்தது. கூலி படம் வசூலில் மந்தம் ஆனதற்கு அதன் சென்சார் சான்றிதழும் ஒரு காரணம் தான்.
இப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளதால், ஃபேமிலி ஆடியன்ஸ் குழந்தைகளுடன் சென்று பார்க்க முடியாமல் உள்ளனர். இதனால் இப்படத்தை மறுபடியும் சென்சார் செய்து யு/ஏ சான்றிதழ் உடன் ரிலீஸ் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுத்துள்ளது.