இலங்கை குறித்து அமெரிக்கா எச்சரிக்கை – பொலிஸார் வெளியிட்ட தகவல்
அறுகம்பே பிரதேசத்தில் இஸ்ரேலியர்களால் கட்டப்பட்ட கட்டிடம் ஒன்று இருப்பதாகவும் அதில் இஸ்ரேலியர்கள் வசித்து வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அண்மைய நாட்களில் அறுகம்பே மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் அலைச்சறுக்கு காரணமாக இஸ்ரேலியர்கள் அதிகமாக சுற்றித் திரிவதாகவும் அவர்கள் சில ஆபத்தை எதிர்நோக்க நேரிடும் எனவும் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இந்த பகுதியில் இஸ்ரேலியர்கள் வசிப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் கிழக்கு மாவட்டத்திற்கு பொறுப்பான பொலிஸ் மா அதிபர் அங்கு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக கிழக்குப் பகுதியின் வீதிகளில் பொலிஸார் அவ்வப்போது வாகனச் சோதனைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இன்றும் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை, கடற்படை மற்றும் புலனாய்வுப் பிரிவினரும் அந்தப் பிரதேசத்தின் பாதுகாப்புக்கான சகல நடவடிக்கைகளையும் தயார் செய்துள்ளதாக அவர் கூறினார்.
இது தொடர்பில் தகவல் கிடைத்தவுடன் உரிய பணிகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
ஒரு குறிப்பிட்ட வருகையாளர் தொடர்பில் நாம் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர்களின் பாதுகாப்பிற்காக மிகவும் கவனமாக செயற்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா மேலும் தெரிவித்தார்.