அதிரும் தியேட்டர்கள்! 15 ஆண்டுகளுக்குப் பின்னும் ‘மங்காத்தா’ மேஜிக்.
2011-ல் வெளியாகி தமிழ் சினிமாவின் ‘கல்ட் கிளாசிக்’ கேங்ஸ்டர் படமாக உருவெடுத்த அஜித்தின் ‘மங்காத்தா’, 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகி புதிய வரலாற்றுச் சாதனைகளைப் படைத்து வருகிறது.
தமிழக வரலாற்றிலேயே மீண்டும் திரையிடப்பட்ட ஒரு படத்திற்கு, ‘புக் மை ஷோ’ (BookMyShow) தளத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுவது இதுவே முதல் முறை. தற்போதைய புதுப்படங்களுக்கு இணையாக மங்காத்தா ‘மரண பயத்தை’ காட்டி வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் காலை 9 மணிக்குக் காட்சிகள் தொடங்கின. ஆனால், அஜித்தின் கோட்டையான கேரளாவில் காலை 7:30 மணிக்கே சிறப்பு காட்சிகள் தொடங்கின. கொச்சியில் உள்ள திரையரங்குகள் அனைத்தும் ‘நிறைந்த’ காட்சிகளாக அஜித்தின் எண்ட்ரியைக் கொண்டாடி வருகின்றன.
சென்னை ரோகிணி திரையரங்கம் மற்றும் வடபழனி கமலா தியேட்டரில் ரசிகர்கள் மேள தாளங்களுடன், பட்டாசு வெடித்து ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர். ரோகிணி தியேட்டரின் முகப்பு முழுவதும் பிரம்மாண்ட பேனர்களால் நிரப்பப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் உள்ள ராம் சினிமாஸின் இரண்டு பெரிய திரைகளிலும் காட்சிகள் நிறைந்துள்ளது. ரசிகர்கள் உருவப்படங்களுக்கு சூடம் காட்டியும், தேங்காய் மற்றும் பூசணிக்காய் உடைத்தும் நேர்த்திக்கடன் போலத் தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.





