இலங்கையில் சினிமா பாணியில் நடந்த தொடர் அதிர்ச்சி சம்பவங்கள்
இலங்கையில் சினிமா பாணியில் பொலிஸ் அதிகாரிகளைப் போல் செயற்பட்டு பல்வேறு பகுதிகளில் பணம், சொத்துகளைக் கொள்ளையிட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மில்லனிய, கஹதுடுவ, அங்குருவாதொட்ட, பாதுக்க, கொஸ்கம, இங்கிரிய, கிரிந்திவெல, பண்டாரகம பகுதிகளில் பணமும் சொத்துகளும் கொள்ளையிடப்பட்டடமை தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாகனங்கள் சிலவற்றை வாளால் சேதப்படுத்திய சம்பவத்துடனும் இவர்கள் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த சம்பவங்களின் பிரதான சந்தேகநபர் கடந்த 18 ஆம் திகதி ஹொரணை – பொக்குணுவிட்ட சந்தியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபரை ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய, ஏனைய 9 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். பொல்கஸ்ஓவிட்ட, பாதுக்க, ஹொரணை, ஹல்தோட்ட, கிருலப்பனை பகுதிகளை சேர்ந்த 20 முதல் 48 வயதிற்கு இடைப்பட்ட சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்களால் கொள்ளையிடப்பட்ட இரண்டு முச்சக்கர வண்டிகள், 6 மோட்டார் சைக்கிள்கள், வெவ்வேறு எடை கொண்ட 3 தங்கக் கட்டிகள், பொலிஸ் என குறிப்பிடப்பட்ட T-shirts மற்றும் Jacket என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர் ஒருவரிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.