பொன்னியின் செல்வன் – ஏ.ஆர். ரஹ்மானுக்கு பிலிம்பேர் விருது
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உலக அளவில் புகழ் பெற்றவர். 90களில் சினிமா துறைக்கு வந்தவர் இன்றளவும் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்துகொண்டிருக்கிறார்.
கடைசியாக அவரது இசையமைப்பில் ஆடுஜீவிதம் திரைப்படம் வெளியானது. அடுத்ததாக தக் லைஃப், ராயன் உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன. சூழல் இப்படி இருக்க பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்துக்காக பிலிம்பேர் விருது பெற்றுக்கொண்ட ரஹ்மான் நெகிழ்ச்சியோடு சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
இந்த வருடத்தில் அவரது இசையமைப்பில் அயலான் திரைப்படமும், லால் சலாம் திரைப்படமும் வெளியாகின. இரண்டு படங்களில் அயலான் திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. கடைசியாக அவரது இசையமைப்பில் ஆடுஜீவிதம் படம் வெளியானது. அதில் ரஹ்மானின் இசை கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிலிம்பேர் விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்துக்காக இந்த விருது அவருக்கு கிடைத்திருக்கிறது.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “அமெரிக்காவில் நான் சுற்றுப்பயணத்தில் இருந்தபோது பொன்னியின் செல்வன் 1 படத்தின் இசையமைப்பிற்கான ஏற்பாடுகள் தொடங்கின. அப்படி தொடங்கிய சில காலத்துக்கு முன்பு நானும், எனது டீமும் ஆராய்ச்சிக்காகவும், இசை கருவிகளை வாங்குவதற்காகவும் பாலிக்கு சென்றிருந்தோம்.
மணிரத்னம் தான் அழைத்து சென்றிருந்தார். அங்கு வாங்கிய இசைக்கருவிகளை கொண்டு பல ட்யூன்களை உருவாக்கினோம். மணிரத்னத்திடம் ஒரு தனித்திறமை இருக்கிறது. அதாவது அவரது தேர்ந்தெடுக்கும் இசை தனித்துவமானதாகவும், எதிர்காலத்தில் கொண்டாடப்படக்கூடியதாகவும் இருக்கும்.
திரைக்கதையுடனும் கச்சிதமாக பொருத்துவார்.மணிரத்னம், லைகா நிறுவனம், எனது டீமில் இருப்பவர்களுக்கு நன்றிகள்” என்று குறிப்பிட்டிருக்கிறார். ரஹ்மான் இதுவரை 30க்கும் மேற்பட்ட பிலிம்பேர் விருதுகளை வாங்கியிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.