முறையான அனர்த்த முகாமைத்துவ பொறிமுறை அவசியம்!
முறையான அனர்த்த முகாமைத்துவ பொறிமுறையொன்றை ஸ்தாபிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மாத்தளை , ரத்தோட்டை கைகாவல பகுதிக்கு சஜித் பிரேமதாச இன்று விஜயம் மேற்கொண்டார்.
மக்களை சந்தித்து கலந்துரையாடினார். மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் கேட்டறிந்தார்.
அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் கூறியவை வருமாறு,
“ பாதிக்கப்பட்ட மக்களைப் பராமரிப்பதும் பாதுகாப்பதும் அனைவரினதும் பொறுப்பும் கடமையுமாகும்.
எதிர்காலத்தில் அவர்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை நாமனைவரும் சேர்ந்து எடுக்க வேண்டும்.
இந்த இலக்கை நோக்கி அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.
இயற்கை பேரிடர்கள் மற்றும் அனர்த்தங்கள் நிகழும் போது அவற்றில் இருந்து வரும் பாதிப்புகளைக் குறைத்துக் கொள்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாட்டிற்கு புதிய இடர் முகாமைத்துவ வேலைத்திட்டமொன்று அவசியம் .
இந்தப் பேரழிவிலிருந்தேனும் பாடங்களைக் கற்றுக்கொண்டு, குறிப்பாக இடம்பெயர்ந்துள்ளோரை பாதுகாப்பான பகுதிகளில் மீள்குடியேற்றுவது முக்கிய விடயமாக காணப்படுகின்றது.
நமது நாட்டில் வாழும் உரிமையானது அடிப்படை உரிமைகளில் பிரதானமான ஒன்றாகும். மக்களின் இந்த அடிப்படை உரிமையைப் பாதுகாக்க இந்த அரசாங்கம் தவறிவிட்டது.
எதிர்காலத்திலேனும் இதுபோன்ற இடர்களை எதிர்கொள்ள முறையான வேலைத்திட்டமொன்று எம்மிடம் அமைந்து காணப்பட வேண்டும்.” என்றார் சஜித்





