போப் பிரான்சிஸ் தொடர்பில் விளக்கமளித்துள்ள வாட்டிகான் நிர்வாகம்
மக்களை சந்திக்கும் போப் பிரான்சிஸ்ஸின் நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டு இருந்த நிலையில், அவருக்கு மிதமான காய்ச்சல் இருப்பதாக வாடிகன் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
கிறிஸ்தவர்களின் மத குருவாக கருதப்படுபவர் போப் ஆண்டவர். வாடிகன் நகரில் வசித்து வரும் இவர் உலகம் முழுவதிலிருந்து வரும் கிறிஸ்தவர்களை நேரில் சந்தித்து உரையாடுவது வழக்கம். தற்போதைய போப்பாக அர்ஜென்டினாவை சேர்ந்த பிரான்சிஸ் இருந்து வருகிறார். 87 வயதான அவர் அடிக்கடி உடல் நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டு வருகிறார். சிறுவயதின் போது அவருக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டதால் அவரது ஒரு நுரையீரல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டிருந்தது.
இதன் காரணமாக அவ்வப்போது நுரையீரல் சார்ந்த உடல்நலக் கோளாறுகளுக்கு போப் ஆளாகி வருகிறார். அந்த வகையில் கடந்த 2021ம் ஆண்டு சுமார் 10 நாட்களுக்கும் மேலாக வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்காக மருத்துவமனையில், போப் பிரான்ஸிஸ் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பின்னர் மீண்டும் 2023ம் ஆண்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனால் மக்களை சந்திப்பது உள்ளிட்ட போப் கலந்து கொள்ளும் பல்வேறு நிகழ்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் போப்பின் உடல்நிலை குறித்து கிறிஸ்தவர்கள் இடையே கவலை நிலவி வந்தது. இந்நிலையில் இது தொடர்பாக வாடிகன் நகர நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மிதமான ஃப்ளூ காய்ச்சல் காரணமாக போப் பாதிக்கப்பட்டு இருப்பதால் அவரது அன்றாட நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கிறிஸ்தவர்கள் ஆறுதல் அடைந்துள்ளதோடு, அவர் விரைவில் உடல்நலம் பெற பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.