ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளிய மைக்ரோசாப்ட்!
உலகின் மிகப் பெரும் முன்னணி நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
அதற்கமையஈ உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனம் என்ற பெருமையை மைக்ரோசாப்ட் நிறுவனம் பெற்றுள்ளது.
2.887 டிரில்லியன் டொலர் சந்தை மதிப்பு கொண்டுள்ள ஆப்பிள் நிறுவனம் மைக்ரோசாப்ட்டை விட 0.3 சதவீதம் குறைவான மதிப்புடன் உள்ளது. இதனால் அந்நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி மைக்ரோசாப்ட் முதலிடத்திற்கு வந்துள்ளது.
2021-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக ஆப்பிள் நிறுவனத்தின் மதிப்பு மைக்ரோசாப்ட்டின் மதிப்பைவிடக் குறைந்துள்ளது. விற்பனையில் சரிவுடன் இந்த 2024-ம் ஆண்டை ஆப்பிள் தொடங்கியிருக்கிறது.
அதே நேரத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்குகள் விற்பனை அதிகரித்துள்ளது. வாஷிங்டனைத் தளமாகக் கொண்ட மைக்ரோசாப்ட் பங்குகள் 1.5 சதவீதம் உயர்ந்துள்ளது. இது அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பை 2.888 டிரில்லியன் டாலராகக் கூட்டியிருக்கிறது.
டிசம்பர் 14 அன்று 3.081 டிரில்லியன் டாலர் சந்தை மூலதனத்தை எட்டிய ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் கடந்த ஆண்டு 48 சதவீதம் லாபத்துடன் முடிவடைந்தன. மைக்ரோசாப்ட்டின் 57 சதவீதம் உயர்வை விட இது குறைவாக இருந்தது. 2023-ம் ஆண்டில் ChatGPT தயாரிப்பாளரான OpenAI உடன் இணைந்ததன் மூலம் மைக்ரோசாப்ட் செயற்கை நுண்ணறிவுத்துறை முதலீடுகளை அதிகம் ஈர்த்துள்ளதால் மைக்ரோசாப்ட்டுக்கு இது சாத்தியமாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு பலவீனம் அடைந்திருப்பதற்கு ஐபோனின் விற்பனை வீழ்ச்சி அடைந்திருப்பது முக்கியக் காரணம் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக, சீனாவில் ஐபோன் விற்பனை அதிக அளவு சரிந்துள்ளது. அதன் காரணமாகவும் ஹவாய் மற்றும் சீன-அமெரிக்கா இடையேயான பதற்றம் காரணமாகவும் ஆப்பிள் நிறுவன சந்தை மதிப்பு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.