பாலியல் வழக்கில் நேபாள வீரர் குற்றவாளி என அறிவிப்பு
பாகிஸ்தான் மற்றும் இலங்கை நடத்திய ஆசிய கோப்பை தொடரில் நேபாள் அணியில் இடம் பெற்று விளையாடியவர் சந்தீப் லமிச்சனே. இவர் கடந்த 2022-ம் ஆண்டு காத்மண்டுவில் உள்ள ஹோட்டலில் 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.
இந்த புகார் கூறப்பட்டபோது சந்தீப் லமிச்சனே வெஸ்ட் இண்டீஸில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்.
அதன் பிறகு அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் மறுப்பு தெரிவித்தார்.
பாலியல் புகார் கூறப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு, சில மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். எனினும் நேபாள் அணியில் இடம் பெற்று விளையாடி வந்தார்.
இந்த நிலையில் தான் அவர் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதில், அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டது.
மேலும், வரும் ஜனவரி மாதம் அவருக்கான தண்டனை விவரங்கள் குறித்து அறிவிக்கபட உள்ளது.