இலங்கை

புதிய அரசியல் யாப்பின் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு : தமிழ் எம்பிகளிடம் ஜனாதிபதி உறுதி!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டின் பொதுத்தேர்தலில் பின்னரே புதிய அரசியல் யாப்பின் ஊடாக தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும் என்று கடந்த 21.12.2023 அன்று ஜனாதிபதியின் தலைமையில் அவரது செயலகத்தில் வடக்கு-கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமது கட்சியின் நிலைப்பாட்டைத் தெரிவித்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உத்தியோகபூர்வ பேச்சாளருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கையின் முழுவிபரம் வருமாறு, 21.12.2023 அன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வடக்கு-கிழக்கு நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பாகவும் அபிவிருத்தி தொடர்பாகவும் பேசுவதற்காக வடக்கு-கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்திருந்தார்.

இதில் வடக்கு மாகாணத்திலிருந்து ஈபிடிபியைச் சார்ந்த திலீபன் என்ற உறுப்பினரைத் தவிர, வேறுயாரும் கலந்துகொள்ளவில்லை. கிழக்கு மாகாணத்திலிருந்து   சம்பந்தன், சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம் (ஜனா), மற்றும் கலையரசன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

ஆளும் தரப்பைச் சேர்ந்த அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தாவோ, வியாழேந்திரனோ, சந்திரகாந்தன் என்றழைக்கப்படும் பிள்ளையானோ இதில் கலந்துகொள்ளவில்லை.

வடக்கு-கிழக்கு அபிவிருத்தி பற்றிப் பேசுகின்றபொழுது வடக்கு-கிழக்கின் அமைச்சர்களாக இருப்பவர்களும் கலந்துகொள்வில்லை. ஜனாதிபதி அவர்களின் ஏமாற்றுத்தனமான நடவடிக்கைகளை எண்ணியோ என்னவோ வடக்கு மாகாணத்திலிருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளவில்லை. இத்தகைய சூழ்நிலையில்தான் வடக்கு-கிழக்கு அபிவிருத்தி தொடர்பாகவும் நல்லிணக்கம் தொடர்பாகவும் பேசப்பட்டதாக அறிகிறோம்.

நல்லாட்சி அரசாங்கத்தில் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபொழுது ஒரு புதிய அரசியல் சாசனத்தைத் தயாரிப்பதற்கான பல்வேறுபட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு வரைவுகளும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ரணிலுக்கும் ஜனாபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக அன்றைய புதிய அரசியல் சாசனத்திற்கான முயற்சிகள் முடக்கப்பட்டது.

இப்பொழுது ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதியாக வந்ததன் பின்னர், இனப்பிரச்சினைத் தீர்வின் மேல் அக்கறை உள்ள ஜனாதிபதியாகத் தன்னைக் காட்டிக்கொள்ள முயற்சி செய்கிறார். தமிழர் தரப்புகளை அழைத்து பேசினார். நாடாளுமன்றத்தில் பதின்மூன்றாவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு ஏனைய கட்சிகளை ஆதரவளிக்கும்படி கோரினார். அவர்களும் ஆதரவளிப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்தனர்.

டெல்லிக்குச் சென்றபொழுதும் பதின்மூன்றை முழுமையாக நிறைவேற்றுவதாக இந்தியப் பிரதமருக்கு உறுதிமொழி அளித்தார். அவ்வப்பொழுது சர்வதேச அழுத்தங்கள் வருகின்றபொழுது இனப்பிரச்சினையைத் தீர்ப்பதாகக் கூறுவதை ஒரு வழக்கமாகக் கொண்டிருக்கின்றார்.

இந்த விதத்தில்தான் கடந்த 21ஆம் திகதி கூட்டமும் ஜனாதிபதியின் செயலகத்தில் நடைபெற்றது. ஊடகங்களின் செய்திகளின்படி மயிலத்தமடு காணிப்பிரச்சினை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டவர்களின் விடுதலை, கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துதல் போன்ற பல விடயங்கள் தொடர்பாக பேசப்பட்டதாகவும் அவற்றைச் செய்வதாக ஜனாதிபதி உறுதியளித்ததாகவும் கூறப்படுகின்றது.

இதில் கலந்துகொண்ட  சம்பந்தன் அவர்கள் பேசுகின்றபொழுது, “வடக்கும் கிழக்கும் மீள இணைக்கப்பட வேண்டும் என்றும் இந்திய-இலங்கை ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு பதின்மூன்றாவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும் என்றும் இல்லையேல் சர்வதேச உதவிளை நாடவேண்டியிருக்கும்” என்றும் அவர் கூறியதாக அறியமுடிகின்றது.

இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி அவர்கள், 2025இல் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி ஒருவருட காலத்திற்குள் புதிய அரசியல் சாசனத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று கூறியது மாத்திரமல்லாமல் தற்போது பதின்மூன்றாவது திருத்தத்தில் இருந்து பறிக்கப்பட்ட சில அதிகாரங்களை மீள வழங்குவதற்கு ஆலோசிக்கலாம் என்றும் கூறியுள்ளார். அதாவது ஒரு விடயத்தை அவர் மிகவும் தெளிவாக கூறுகிறார். 2026ஆம் ஆண்டு முடிவடைந்தாலும்கூட தீர்வு கிடைப்பது சந்தேகமே என்பதை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

அரசியல் சாசனத்தில் இருக்கக்கூடிய பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கால அவகாசங்களை கோருகின்ற ஒரு விடயத்தைத்தான் எம்மால் பார்க்க முடிகின்றது. அது மாத்திரமல்லாமல் ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் எவ்வாறு வெற்றிகொள்வது அதற்குப் புலம்பெயர் தமிழர்களையும் வடக்கு-கிழக்குத் தமிழர்களையும் எவ்வாறு பயன்படுத்திக்கொள்வது போன்ற சிந்தனைகளில் ஜனாதிபதி ஈடுபடுகின்றாரே தவிர, இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது அவரது முன்னுரிமைப் பட்டியலில் கிடையவே கிடையாது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

இப்பொழுது புதிய இந்தியத் தூதுவர் இலங்கைக்கு வந்திருக்கின்றார். அவரை நாங்கள் இருகரம்கூப்பி வரவேற்கின்றோம். யுத்தம் முடிந்து பதினான்கு வருடங்கள் கடந்த பின்னரும்கூட, தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண சிங்கள அரசதரப்பினர் தயாராக இல்லை என்பதை புதிய இந்திய தூதுவர் தயவு செய்து புரிந்துகொள்ள வேண்டும். இலங்கை ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்குக் கொடுக்கும் உறுதிமொழிகளும் டெல்லிக்குக் கொடுக்கும் உறுதிமொழிகளும் அடுத்த கனமே காற்றில் பறக்கவிடப்படுகின்றது என்பதுதான் நிதர்சனமான

உண்மை.
இத்தகைய ஒரு சூழ்நிலையில் சிங்கள அரசியல் தலைமைகளின் அசமந்தப் போக்கைச் சுட்டிக்காட்டக்கூடிய வகையில் தமிழ் மக்கள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி அவருக்கு வாக்களிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் – என்றுள்ளது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content