நான் கூறியதில் தவறு இல்லை! மன்னிப்பு கேட்க மாட்டேன் – மீண்டும் கூறிய குஷ்பு
சர்ச்சையை கிளப்பிய ‘சேரி’ மொழி விவகாரம் தொடர்பில் மீண்டும் ஊடகத்தை சந்தித்த நடிகை குஷ்பு தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மன்சூர் அலி கான் பேசியதைத் தொடர்ந்து, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.அதனைத் தொடர்ந்து நபர் ஒருவர், மணிப்பூர் பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டபோது நடவடிக்கை எடுக்காத குஷ்பு, தற்போது திரிஷாவுக்காக குரல் கொடுத்திருக்கிறார் என கூற, அவருக்கு பதில் கொடுக்கும்போது ‘சேரி மொழியில்’ பேச முடியாது என்று குஷ்பு குறிப்பிட்டார்.
இந்த விடயம் சர்ச்சையாக வெடித்தது. குஷ்புக்கு எதிராக காயத்ரி ரகுராம் உட்பட பலர் கருத்து தெரிவித்தனர். ஆனாலும் அவர் தவறான நோக்கத்தில் கூறவில்லை என நீண்ட விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில் மீண்டும் இவ்விவகாரம் தொடர்பில் குஷ்பு செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அவர் பேசும்போது, ‘நான் சொன்ன ஒரு வார்த்தைக்காக என்னை அசிங்கப்படுத்துவதாக நினைத்து இவ்வாறு காங்கிரஸ் கட்சியினர் செயல்படுகின்றனர். இந்தியா முழுவதும் தலித் மக்களுக்கு எதிராக பல்வேறு குற்றம் நடைபெறுகிறது.
இரண்டு நாட்களுக்கு முன் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டது குறித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் செய்யவில்லை. நான் கூறிய வார்த்தை தவறு இல்லை. நான் அதில் தெளிவாக இருக்கிறேன், தவறு செய்திருந்தால் நிச்சயமாக மன்னிப்பு கேட்டு இருப்பேன்.
செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன். குஷ்புவின் வீட்டின் முன்பு போராடினால் இரண்டு நாள் பப்ளிசிட்டி கிடைக்கும் என்று எண்ணி போராடி உள்ளார்கள். ஒரு வாரமாக போராட வரேன் என்று சொன்னார்கள், ஆனால் ஒரு வாரத்திற்கு பிறகு 20 பேருடன் வந்து போராடி உள்ளனர்’ என தெரிவித்துள்ளார்.