நாமலுக்கு ஏற்பட்டுள்ள திடீர் சந்தேகம்!

தோல்வியடைந்த கரிம உரத் திட்டத்தை அமுல்படுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு போராட்டத்தை முன்னெடுத்த மூன்றாம் தரப்பு ஆலோசனை வழங்கியதாக சந்தேகிக்கப்படுகின்றது என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிடுகின்றார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஹிரியால தொகுதிக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ மேற்படி கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், முன்னாள் ஜனாதிபதிக்கு யார் அந்த அறிவுறுத்தல்களை வழங்கியது என்பது குறித்து ஆராயப்பட வேண்டும் என்றார்.
யார் என்ன சொன்னாலும் கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்ட கரிம உரத் திட்டம் முற்றாகத் தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் ஏற்றுக் கொண்டார்.
எவ்வாறாயினும், உர மானியம் ஒருபோதும் குறைக்கப்படாது என்பதில் தாம் உறுதியாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.