திருகோணமலையில் விவசாய காணிகள் குறித்து பிரதேச மக்கள் விடுத்த கோரிக்கை
வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இடமே தென்னமர மரவாடி ஆகும். இக்கிராமத்தில் 92 குடும்பங்கள் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருவதாகவும் தற்போது புல்மோட்டை அரிசி க்ஷமலை விகாரையின் பௌத்த மதகுரு தமது காணிகளை ஆக்கிரமித்து வருவதாகவும் அப்பகுதியில் உள்ள மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
45 வருட காலமாக தமது கிராமத்தில் வாழ்ந்து வருகின்ற நிலையில் காணிகளுக்குள் காணப்படுகின்ற பற்றைகளை அகற்ற முடியாத நிலையில் காணப்படுகின்ற போதும் குறித்த பௌத்த மதகுரு தமிழ் மக்களுக்கு உரிய காணிகளை ஆக்கிரமித்து பாரிய மரங்களை வெட்டி வருவதாகவும்,இவ்வாறான அடாவடித்தனத்தினால் குறித்த கிராமத்துக்கு மக்கள் வருகை தருவதில்லை எனவும் பிரவேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தமக்குச் சொந்தமான காணிகளை புல்மோட்டை- அரிசி மலை பௌத்தப்பிக்கு துப்புரவு செய்து வருவதாகவும் பாரிய மரங்களை வெட்டி காணிகளை பூஜா பூமி என்று கூறி ஆக்கிரமித்து வருவதாகவும் அக்கிராம மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆரம்ப காலத்தில் இருக்கும்போது மிகவும் சந்தோஷமாக இருந்தோம் தற்போது நாங்கள் கவலையுடன் வாழ்ந்து வருகின்ற நிலையில் கிராமத்தை விட்டு செல்லவேண்டிய மனநிலை ஏற்பட்டுள்ளதாகவும் மற்றுமொரு நபர் தெரிவித்துள்ளார்.
தற்போது இனவாதம் கக்குகின்ற பிக்குகளால் இக்கிராமம் அழிந்து போகின்றது. யுத்த காலத்தை அடுத்து நாங்கள் கிராமத்துக்கு வரும்போது இராணுவ முகாம் மாத்திரமே காணப்பட்டது.
இராணுவத்தினர் சமயத்தை வழிபடும் வகையில் புத்தர் சிலையொன்றை வைத்து தமது சமய வழிபாடுகளை மேற்கொண்டு வந்தனர்.
தற்போது அரிசி மலை பௌத்தப்பிக்கு அந்த இடத்தை விகாரைக்குரிய இடம் எனவும் 150 க்கும் மேற்பட்ட ஏக்கர் காணி தேவை எனவும் கூறி மக்களுடைய காணிகளை ஆக்கிரமித்து வருவதாகவும் தமிழ் மற்றும் சிங்கள மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இவ்வாறான செயற்பாடுகளை அரச அதிகாரிகள் பார்த்துக் கொண்டிருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் நாட்டின் ஜனாதிபதி மற்றும் திருகோணமலை மாவட்ட அரசியல்வாதிகள் இவ்விடயத்தில் கூறிய கவனம் எடுத்து மக்களுடைய காணிகளைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தென்னமர வாடி மக்கள் கோரிக்கை விடுகின்றனர்