ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கை – எந்நேரத்திலும் இரத்தாகும் விசா!
2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ட்ரம்ப் நிர்வாகம் 8,000 க்கும் மேற்பட்ட மாணவர் விசாக்கள் உட்பட அதிக எண்ணிக்கையிலான விசாக்களை இரத்து செய்துள்ளது.
இது கடந்த ஆண்டு திரும்பப் பெறப்பட்ட எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகம் என்று வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், தாக்குதல்கள் மற்றும் திருட்டு போன்ற குற்றங்கள் விசாக்களை இரத்து செய்யப்பட்டமைக்கு ஏதுவான காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.
இதற்கிடையே செல்லுபடியாகும் அமெரிக்க விசாக்களை வைத்திருந்த “55 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டினர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியிழப்புக்கான அறிகுறிகள் தென்படும் எந்த நேரத்திலும் வெளியுறவுத்துறை விசாக்களை ரத்து செய்யும் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
காலாவதியான தங்குதல், குற்றச் செயல்கள், பொதுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள், எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையிலும் ஈடுபடுதல் அல்லது பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு வழங்குதல் போன்ற எந்த அறிகுறிகள் தென்பட்டாலும் விசாக்கள் இரத்து செய்யப்படும் என்பதை அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளியுறவுத்துறையின் விசா மறுப்பு மற்றும் இரத்து கொள்கைகளுக்கு மேலதிகமாக, உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தீவிரமான தடுப்பு மற்றும் நாடுகடத்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





