19 நாடுகளின் புகலிடக் கோரிக்கையை நிறுத்திய ட்ரம்ப்!
பயணக் கட்டுப்பாடுகளின் கீழ் இருந்த 19 நாடுகளிலிருந்து வரும் அனைத்து குடியேற்ற விண்ணப்பங்களையும் நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
வொஷிங்டன் (Washington), டி.சி.யில் இரண்டு தேசிய காவல்படை வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய நிலுவையில் உள்ள அனைத்து புகலிடம் மற்றும் சலுகை கோரிக்கைகளிலும் ‘விரிவான மறுபரிசீலனை’ மற்றும் ‘தீர்ப்பு நிறுத்திவைப்பு’ ஆகியவற்றை கட்டாயமாக்கும் ஒரு குறிப்பாணையை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (USCIS) வெளியிட்டுள்ளது.
இந்நடவடிக்கையானது ஆப்கானிஸ்தான், ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் உள்ளிட்ட நாடுகளிலிருந்து கிரீன் கார்டுகள் மற்றும் அமெரிக்க குடியுரிமையை நாடும் நபர்களை பெரிதும் பாதித்துள்ளது.
இந்த இடைநிறுத்தம் ஏற்கனவே குடியுரிமைக்காக விண்ணப்பித்து காத்திருப்போரை கடுமையாக பாதிக்கும் என்று குடியேற்ற வழக்கறிஞர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் ஏற்கனவே ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் புகலிட விண்ணப்பங்கள் குறித்த முடிவுகளுக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.




