காவியை கண்டு அஞ்சும் சிவப்பு!
இலங்கையை பொறுத்தவரையில் ‘சிவுர’ எ்னற காவி உடையை அணிபவர்கள், பௌத்த மதம் சார்ந்த விடயங்கள் மற்றும் புத்தர் சிலை ஆகியவற்றுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் குறித்து நான் சொல்லி, இந்த கட்டுரையை வாசிக்கும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய அவசியமிருக்காது என நம்புகின்றேன். இலங்கையை ஒரு பௌத்த நாடாகவே சிங்கள பெரும்பான்மை மக்கள் பார்க்கின்றனரை். ஏன், சில செயற்பாட்டாளர்கள், தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் அனைவருமே அப்படித்தான் கருதுகின்றனர். அவர்கள் இந்த விடயத்தை தொடர்ச்சியாக வலியுறுத்தியும் வந்துள்ளனர். இந்த விடயங்களை மெய்ப்பிக்கும் ஒரு சம்பவம் அண்மையில் திருகோமலையில் அரங்கேறியிருந்தது.
இலங்கையில் நவம்பர் 17, 18ஆம் திகதிகளில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த திருகோணமலை ‘புத்தர் சிலை வைப்பு’ விவகாரத்தில் மனுதாரர் தரப்பு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு (கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம் மற்றும் கல்யாணவன்ச திஸ்ஸ தேரர்) ஆகியோர் இணக்கத்தின் அடிப்படையில் அமைதியான முறையில் பிரச்சினையை தீர்த்துக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒரு ஆலோசனையை வழங்கியிருந்தது. சட்டவிரோதமாக சிலை வைக்க முயற்சிக்கப்பட்ட, நன்கொடையாக வழங்கப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு சட்டவிரோத கட்டடத்தை அகற்றுமாறு, கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அறிவுறுத்திய நிலையில், அந்த கட்டடத்தை இடித்து அகற்றுவதை தடுத்து நிறுத்துமாறு கோரியே கல்யாணவன்ச திஸ்ஸ தேரர் மனுவை தாக்கல் செய்திருந்தார். இவ்வாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆலோசனை வழங்கிய நிலையில், சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற அதேவேளை, சில விடயங்களில் அதனுடன் தொடர்புடைய அரசியல் நடவடிக்கைகளையும் கவனத்தில்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் பொலிஸாருக்கு அறிவுறுத்தினார்.
மேன்முறையீட்டு நீதிமன்றம் பிரச்சினைக்கு தீர்வினை வழங்காது இரு தரப்பிற்கும் ஆலோசனை வழக்கினை ஒத்திவைத்த நிலையில், சட்டத்தை நடைமுறைப்படுத்திய பொலிஸாரை கேள்வி எழுப்பிய ஜனாதிபதி அவர்களை எச்சரித்தமை ஒருவித விவாதத்தை தோற்றுவித்துள்ளது.
சம்பவம்
திருகோணமலையில் 1951ஆம் ஆண்டு முதல் இருந்ததாக கூறப்படும் ஆரம்பிக்கப்பட்டதாக குறிப்பிடப்படும் முதலாவது பௌத்த அறநெறி பாடசாலையை அமைப்பதற்கு எனக் குறிப்பிடப்பட்டு, பாடசாலை இருந்ததாகக் கூறப்படும் அதே இடத்தில் அடிக்கல் நாட்டும் வைபவம் ஒன்று நவம்பர் 16ஆம் திகதி, பௌத்த தேரர்கள் உள்ளிட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது. நவம்பர் 17, 2025 அன்று, ஏற்கனவே அறிவிக்கப்பட்டமைக்கு அமைய, கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம், குறித்த காணியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தை (உணவகம்) அகற்றுவதற்காக அதிகாரிகள் செல்லவிருந்த நிலையில், நவம்பர் 16 இந்த அடிக்கல் நாட்டும் சம்பவம் இடம்பெற்றிருந்தது. அடிக்கல் நாட்டப்பட்டதோடு, அன்றைய தினம் இரவு புத்தர் சிலையும் அங்கு வைக்கப்பட்டது. இந்த புத்தர் சிலையை அகற்றிய பொலிஸார், அரசாங்கத்தின் உத்தரவிற்கு அமைய அந்த சிலையை, ஏற்கனவே சிலை வைக்கப்பட முயற்சிக்கப்பட்ட அதே இடத்திலேயே 17ஆம் திகதி வைத்தனர், அன்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இது வாதப்பிரவாதிவாதங்களை தோற்றுவித்ததோடு, குறிப்பாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கம் பௌத்த பேரினவாத சிந்தனையுடன் செயற்படுவதாக குற்றஞ்சாட்டியிருந்தனர்.
1951ஆம் ஆண்டு முதல் அந்த இடத்தில் பௌத்த அறநெறிப் பாடசாலை ஒன்று இயங்கியதாக சொல்லப்படும் கருத்தை மறுத்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், 1957ஆம் ஆண்டு வரை, பிரித்தானிய அரச கடற்படை (Royal Navy) அந்த இடத்தில் நிலைகொண்டிருந்ததாகவும், பொது மக்களுக்கு அங்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததாகவும் யூடியுப் தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தார்.

பாதுகாப்புதான் காரணமா?
உண்மையில் பாதுகாப்பிற்காகத்தான் அந்த சிலை அங்கிருந்து அகற்றப்பட்டதென்றால் அமைதியான முறையில் பொலிஸார் தேரர்கள் உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடி சிலையை அங்கிருந்து எடுத்துச் சென்றிருக்க வேண்டும். ஆனால் அங்கு அவ்வாறான சம்பவங்கள் ஏதும் இடம்பெறவில்லை (காணொளி சாட்சிகளுக்கு அமைய) ஒருவித பதற்றமான நிலையில், பொலிஸார் வலிந்து அந்த சிலையை அங்கிருந்து கொண்டுச் சென்றமையை அவதானிக்க முடிந்தது. இந்த விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார். சரி அமைச்சர் குறிப்பிடுவதுபோல் உண்மையிலேயே பாதுகாப்புக் காரணங்களுக்காகத்தான் இந்த சிலை அங்கிருந்து அகற்றப்பட்டதென்றால், சிலைக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது யார்? இந்த கேள்விக்கு இதுவரை அரசாங்கம் பதிலளிக்கவில்லை. காரணம், சிலை வைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் சட்டசிரோதமாக சிலை வைக்கப்படுவதாக பதிவுகள் வெளியாகியிருந்தனவேத் தவிர, எவரும் சிலை வைக்கப்படுகின்றமைக்கு எதிராக போராட்டங்களை நடத்தவில்லை.
இந்த இடத்தில் சந்தேகக் கண்டுகொண்டு பார்க்க வேண்டியது ஒரேயொரு நிறுவனத்தைதான், கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களமே அது. அவ்வாறெனின் சிலைக்கு பாதுகாப்பு அச்சுசுறுத்தலை ஏற்படுத்திய இந்த திணைக்களம்தானா? என்ற கேள்வி எழுகிறது.
நாமல் சந்திப்பு
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான, நாமல் ராஜபக்ச, புகைப்படங்களுடன் தனது பேஸ்புக் பக்கத்தில், “அமரபுர மகா நிகாயவின் கிழக்கு தமன்கடுவ பிரிவுகளின் தலைமை சங்கநாயக்கர், வெல்கம ரஜமகா விகாரை, உனு திய லிங் ராஜமகா விகாரை, பொரலுகந்த ரஜமகா விகாரை விகாராதிபதி, அகில இலங்கை சமாதான நீதவான், ஸ்ரீ ரத்தனவன்ச பௌத்த அறநெறிப் பாடசாலையின் வணக்கத்திற்குரிய அம்பிட்டியே சீலவன்ச திஸ்ஸ தேரர் ஆகியோர் திருகோணமலையில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் சம்பவம் குறித்து விவாதிக்க பத்தரமுல்ல, நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்திற்கு வருகை தந்தனர்’ என பதிவிட்டிருந்தார். உண்மையில் பௌத்த சமய விவகார அமைச்சரை அல்லது அதனுடன் தொடர்புடைய திணைக்கள அதிகாரிகளை சந்திக்க வேண்டிய தேரர்கள் ஏன் நாமல் ராஜபக்சவை சந்தித்தனர் என்ற கேள்வியையும் பலர் எழுப்புகின்றனர்.

விகாரை ஒன்று இருக்கவில்லை
ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி போதிராஜா விகாரையின் விகாராதிபதி மிஹிந்துபுர மஹிந்தவன்ச திஸ்ஸ என்ற தேரருக்கு 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நன்கொடையாக வழங்கிய காணியில் ஒரு விகாரை இருந்ததாக பரவிய வதந்திக்கும் தற்போதைய ஜனாதிபதி முற்றுப்புள்ளி வைத்திருந்தார். “விகாரையின் விகாராதிபதி ஒருவர் உரித்துடன் ஒரு காணியை வைத்திருந்தார். ஆனால் அங்கு மத வழிபாடுகளை செய்யும் இடம் இருக்கவில்லை. அதுதான் உண்மை,” என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பொலிஸாருக்கு எச்சரிக்கை
மேலும், சட்டத்தை நேரடியாக செயல்படுத்த வேண்டிய விடயங்கள் இருந்தாலும், சில விடயங்களில் அதனுடன் தொடர்புடைய அரசியல் நடவடிக்கைகளையும் கவனத்தில்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் பொலிஸாரை எச்சரித்திருந்தார். “பொலிஸார் சட்டத்தைப் போல், இந்த விடயங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும். சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதேவேளை, ஏற்படக்கூடிய சமூகப் பிரச்சினைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தியே சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். சட்டத்தை நேரடியாக நடைமுறைப்படுத்த வேண்டிய விடயங்கள் இருந்தாலும், சில விடயங்களில் அதனுடன் தொடர்புடைய அரசியல் நடவடிக்கைகளையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.” என ஜனாதிபதி பொலிஸாரை எச்சரித்திருந்தார். உண்மையில் இது சட்டவிரோத செயல் எனத் தெரிந்தும், சட்டத்தை நடைமுறைப்படுத்திய பொலிஸாரை ஜனாதிபதி எச்சரித்த விடயத்தை சாதாரணமாக கடந்து போய்விட முடியாது.
கலகொட அத்தே ஞானசார
தேசிய மற்றும் மத ஒற்றுமையை சீர்குலைத்து குற்றச்சாட்டில் கடந்த வருடம் சிறையில் அடைக்கப்பட்ட சிங்கள பௌத்த பேரினவாத அமைப்பான பொதுபல சேனாவின் கலகொட அத்தே ஞானசார, சர்ச்சைக்குரிய இடத்தில் மேலும் காணிகளை வலுக்கட்டாயமாக அபகரிக்க வேண்டுமென வலியுறுத்தினார். “ஐம்பதுகளில் இருந்த இந்த 40 பேர்ச்சஸ் வேலையில்லை. நாங்கள் ஒரு ஏக்கர் கேட்க வேண்டும். அதற்காகத்தான் நாங்கள் போராட வேண்டும். ஏக்கரை முழுமையாக்கி அந்த இடத்தில் வேலி அமையுங்கள். அதற்கு ஒரு நாளை ஒதுக்குங்கள்” எனினும் இந்த கருத்துக்கு எவரும் எதிர்க்கவும் இல்லை, நடவடிக்கை எடுக்கப்படவும் இல்லை.
சட்டம்
1981 ஆம் ஆண்டின் 57 ஆம் இலக்க கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவச் சட்டமானது மிகவும் இறுக்கமான ஒன்றாகும். நீதிமன்ற அனுமதியின்றி, சட்டவிரோதமான கட்டடங்களை அகற்றுவதற்கான பணிப்புரையை பொலிஸாருக்கு வழங்குவதற்கான அதிகாரம் கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்திற்கு காணப்படுகிறது. அந்த அதிகாரத்தின் கீழ்தான் சர்ச்சைக்குரிய காணியில் காணப்படும் கட்டடத்தை அகற்றும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் அந்த உத்தரவை குறித்த கட்டடத்தின் உரிமையாளர்களோ அல்லது அந்த இடத்தை உணவகம் ஒன்றை நடத்துவதற்கு குத்தகைக்கு வழங்கிய தேரரோ கவனத்திற்கொள்ளவில்லை. விகாரைக்கு சொந்தமான காணியாகவே இருந்தாலும், கடற்கரையில் கட்டுமானப் பணிகளை கடற்கரையிலிருந்து 10 மீட்டர் தொலைவில் மாத்திரமே மேற்கொள்ள முடியுமென, கடலோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பி.பீ. டர்னி பிரதீப் குமார வலியுறுத்துகிறார். இருப்பினும், அந்த காணியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடம் கடற்கரையிலிருந்து சுமார் 4 மீட்டர் தொலைவிலேயே அமைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழ் மக்களின் காணிகளை கைப்பற்றி சட்டவிரோத விகாரைகளை அமைப்பது ஒன்றும் புதிய விடயமல்ல, தையிட்டியில் பொது மக்களின் காணிகளை கையகப்படுத்தியே திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டது. நீதிமன்ற தடை உத்தரவுகள் இருந்த போதிலும் குருந்தூர் மலையில் விகாரை அமைக்கப்பட்டது. திருக்கோணமலை, குச்சவெளி பிரதச சபைக்குட்பட்ட பிரதேசத்தில் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு சிங்கள ‘பௌத்தர்களே வாழாத’ போதிலும் 30ற்கும் மேற்பட்ட விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும் சிங்களவர்கள் தலைமைப் பதவியை வகிக்கும் அரச திணைக்களத்தின் உத்தரவை மீறி, ஒரு கட்டுமானத்தை அமைக்க சிங்கள மக்களை உள்ளடக்கிய பௌத்த தேரர்கள் குழு முயற்சித்து அதில் முதல் படியை தாண்டியுள்ளது: நிறைவேற்று அதிகாரமோ, நீதிமன்றமோ, சட்டவாக்க சபையோ அதற்கு எதிராக வாயடைத்து நிற்கிறது.
வெறும் வாயை மென்றுகொண்டிருந்தவர்களுக்கு ‘அவல் கிடைத்த கதையாக’ எதிர்க்கட்சியினர் இந்த விடயத்தை தமது இனவாத-சுயநல அரசியலுக்காக பயன்படுத்திக்கொண்டனர், விடயத்தை எதிர்த்துப் பேசிய தமிழ் அரசியல்வாதிகளுக்கு இனவாத முத்திரை குத்தப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் இது வழமைதானே என கடந்து செல்கின்றனர்.
சந்திரிக்கா
Beta feature
Beta feature
Beta feature





