சீனாவில் ஊழியர்களுக்குப் பரிசாகத் தங்கம் வழங்கும் பிரபல நிறுவனம்
சீனாவில் பிரபல தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று, தனது பணியாளர்களுக்குத் தங்கத்திலான கணினி உபகரணம் ஒன்றை வழங்கி பலரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமது நிறுவனத்தில் சிறந்து விளங்கும் ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில், தங்க விசைமூடிகளை (Gold Keycaps) Insta360 என்ற தொழில்நுட்ப நிறுவனம் வழங்கி வருகிறது.
கடந்த நான்கு வருடங்களாகப் போனஸ் என்ற அடிப்படையில் மிகவும் பெறுமதியான பொருட்களை வழங்கி ஊழியர்களை மகிழ்வித்து வருகிறது.
அந்த வகையில், இம்முறை கணினியின் விசைப்பலகையில் (Keyboard) பொருத்தக்கூடிய தங்க விசைமூடிகளைப் (Gold Keycaps) பரிசாக வழங்கியுள்ளது.
21 ஊழியர்களுக்கு இந்தத் தங்க விசைமூடிகள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் 35 கிராம் தங்கம் கொண்டவை ஆகும். ஒன்றின் பெறுமதி சுமார் 320,000 யுவான் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சமகாலத்தில், உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலை உச்சத்தை எட்டியுள்ளது. இதனால், ஊழியர்களுக்கு இரட்டிப்பான பெறுமதியில் பரிசு கிடைத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
தங்கத்தின் மதிப்பை மட்டும் கருத்தில் கொண்டு இதனைக் கொடுக்கவில்லை என நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
தங்கம் ‘நிலைத்தன்மையைக்’ (Stability) குறிப்பதால், அதுபோன்ற ஒரு குணத்தை ஊழியர்கள் பெற வேண்டும் என்பதற்காகவே இந்தச் சிறப்புப் பரிசு வழங்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த நிறுவனம் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஊழியர்களுக்குத் தங்கத்தைப் பரிசாக வழங்கி வருவதால், இதனை ‘தங்கத் தொழிற்சாலை’ என ஊழியர்கள் மகிழ்ச்சியாகத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.





