பொருளாதார பதற்றங்களுக்கு மத்தியில் சீனா செல்லும் ட்ரம்ப்?

சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் நல்ல உறவைப் பேணவும், இந்த மாத இறுதியில் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளவும் எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸை (Australian Prime Minister Anthony Albanese) நேற்று சந்தித்த ட்ரம்ப், தைவான் (Taiwan) மீதான சீனத் தாக்குதல் குறித்த அச்சங்களைக் குறிப்பிட்டு செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே மேற்படி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சீனா (China) தைவானை (Taiwan) ஆக்கிரமிக்காது என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்கா “இதுவரை உலகின் வலிமையான இராணுவ சக்தியாக” உள்ளது என்பதை பெய்ஜிங் (Beijing) புரிந்துகொண்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சீனாவிற்கான விஜயம் குறித்து கருத்து வெளியிட்ட அவர், “சீனாவுக்குச் செல்ல எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நான் அதைச் செய்வேன். நாங்கள் அதை ஓரளவுக்கு நிர்ணயித்துள்ளோம்,” என்றும் கூறியுள்ளார்.
சீனாவிற்கும், அமெரிக்காவிற்கும் வளர்ந்து வரும் வர்த்தக போர் நடவடிக்கைகள் இருநாட்டு உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையில் ட்ரம்பின் இந்த கருத்துக்கள் வந்துள்ளன.