முடிவுக்கு வரும் காசா போர்! ட்ரம்பின் திட்டத்தில் கையொப்பமிட்ட ஹமாஸ் – இஸ்ரேல்
காசாவில் இரண்டு வருடங்களாக நீடிக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சமாதான உடன்படிக்கையின் கீழ் சாத்தியமாகியுள்ளது.
இஸ்ரேலும் ஹமாஸும் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பில் உடன்பாட்டை எட்டியுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
எகிப்தில் இடம்பெற்ற சமாதான பேச்சுவார்த்தையில் ட்ரம்பின் 20 அம்ச திட்டத்தின் ஆரம்ப கட்டங்கள் குறித்து இரு தரப்புக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்டால், ஈரான், ஏமன் மற்றும் லெபனான் போன்ற நாடுகளை உள்ளடக்கிய பிராந்திய மோதலாக அதிகரித்த போர் முடிவுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“எங்கள் சமாதானத் திட்டத்தின் முதல் கட்டத்தில் இஸ்ரேலும் ஹமாஸும் கையெழுத்திட்டுள்ளன என்பதை அறிவிப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, அனைத்து பணய கைதிகளும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள். மேலும் வலுவான மற்றும் நீடித்த சமாதானத்தை நோக்கிய முதல் படியாக இஸ்ரேல் தனது படைகளை ஒப்புக் கொள்ளப்பட்ட எல்லைக்குள் திரும்பப் பெறும்” என ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.





