பிரித்தானியாவில் போராட்டங்களை கட்டுப்படுத்த காவல்துறையினருக்கு அதிகாரங்களை வழங்க தீர்மானம்!
பிரித்தானியாவில் போராட்டங்களை நடத்துவதற்கான நிபந்தனைகளை விதிக்க காவல்துறையினருக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத், போராட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்படாது, மாறாக அதனை எவ்வாறு நடத்த வேண்டும் என்ற நிபந்தனைகளை உருவாக்க அனுமதி வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.
மென்செஸ்டரில் யூத ஆலயம் ஒன்றில் நடந்த கத்தி குத்து தாக்குதல் மற்றும் கார் ஒன்று கூட்டத்தினர் இடையே புகுந்த சம்பவங்களைத் தொடர்ந்து சனிக்கிழமை பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டங்களை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
இருப்பினும் போராட்டக்காரர்கள் பிரித்தானிய பிரதமரின் அறிவிப்பை அலட்சியம் செய்து போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இதன் தொடர்சியாக பலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்தே காவல்துறையினருக்கு இதற்கான அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் பரிசீலிக்கப்பட்டதாக உள்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேற்படி காவல்துறையினருக்கு வழங்கப்படும் புதிய அதிகாரங்கள் “முடிந்தவரை விரைவில் கொண்டு வரப்படும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அதிகாரங்களின்படி, ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் போராட்டங்கள் நடைபெறும் பட்சத்தில் அதனை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு காவல்துறையினருக்கு அதிகாரம் வழங்கப்படும். அதேபோல் எவ்வளவு நேரம் போராட்டத்தை முன்னெடுக்கலாம் என்பதை வரையறுக்கவும் முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படும் என உணர்ந்தால் போராட்டத்தை முற்றிலுமாக தடை செய்வதற்கும் புதிய விதிகளின்கீழ் அதிகாரம் வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.
போராட்டங்கள் நடத்துவது மக்களின் அடிப்படை உரிமை என்றாலும் கூட ஒருவரின் உரிமை மற்றயவரின் சுதந்திரத்தை பாதிக்கக்கூடாது எனவும், தற்போது பிரித்தானியாவில் எழுந்துள்ள மத ரீதியான அசம்பாவிதங்களால் மக்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாகவும் உள்துறை செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தற்போதைய போராட்டச் சட்டத்தை மறு ஆய்வு செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





