போதைப்பொருள் வழக்கு… கிருஷ்ணா, ஸ்ரீகாந்துக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழ் சினிமா உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள போதைப்பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
மே 22ந் தேதி அன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு இரவு விடுதியின் வெளியே நடந்த மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், முன்னாள் அதிமுக ஐடி பிரிவு நிர்வாகி டி. பிரசாத் தலைமையில் செயல்படும் ஒரு பெரிய போதைப்பொருள் கும்பலை காவல்துறை கண்டுபிடித்தது.
பிரசாத், சினிமா துறையில் உள்ள சில முக்கிய நபர்களுக்கு கொக்கைன் விநியோகம் செய்து வந்ததாக காவல்துறை கண்டறிந்துள்ளது. இதில் நடிகர் ஸ்ரீகாந்த் ஜூன் 23 அன்று கைது செய்யப்பட்டார். கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில், இவரது இரத்த மாதிரிகளில் போதைப்பொருள் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது.
ஸ்ரீகாந்தின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு கிராம் கொக்கைன் மற்றும் ஏழு காலி பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து ஜூலை 7 வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.
ஸ்ரீகாந்தின் வாக்குமூலத்தில் கிருஷ்ணாவின் பெயர் குறிப்பிடப்பட்டதால், நடிகர் கிருஷ்ணாவையும் சென்னை காவல்துறை கைது செய்தது. 20 மணி நேர விசாரணைக்குப் பிறகு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கிருஷ்ணாவின் நண்பர் கெவினும் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அதிமுக நிர்வாகியும் திரைப்பட தயாரிப்பாளருமான டி. பிரசாத் கைது செய்யப்பட்ட பின்னர், கிருஷ்ணா விசாரணைக்காக காவலில் எடுக்கப்பட்டார்.
மேலும், இரண்டு முன்னணி நடிகைகளும் காவல்துறையின் கண்காணிப்பில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தமிழ் சினிமா துறையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கு விசாரணையை விரிவுபடுத்தும் விதமாக, இரண்டு முன்னணி தமிழ் நடிகைகள் காவல்துறையின் கண்காணிப்பில் உள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் தங்களை ஜாமீனில் விடுவிக்க கோரி ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகிய இருவரும் மனுதாக்கல் செய்திருந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம் இருவருக்குமே ஜாமீன் தர மறுத்துவிட்டது.