சர்வதேச அணுசக்தி அமைப்புடனான ஒத்துழைப்பை இடைநிறுத்திய ஈரான்

ஐ.நா.வின் அணுசக்தி காண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி அமைப்பு உடனான ஒத்துழைப்பை இடைநிறுத்தம் செய்து ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஸ்கியன் உத்தரவிட்டுள்ளார்.
ஈரான் உடனான அணுசக்தி தொடர்பான அமெரிக்காவின் பேச்சு தோல்வியில் முடிந்தது. மறுபக்கம் ‘ஈரான் அணுசக்தியை அணு ஆயுதம் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. அது எங்களை குறிவைக்கும்’ என்று, இஸ்ரேல் கூறியது. இதையடுத்து, ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. அதில் அமெரிக்காவும் இணைந்தது.
ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி மையங்களான போர்டோ, நடான்ஸ், இஸ்பஹான் ஆகியவை தாக்கப்பட்டதாக அமெரிக்காவும், இஸ்ரேலும் கூறுகின்றன.
ஆனால், இந்த தாக்குதல்களுக்கு முன்பாகவே, 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை பாதுகாப்பான இடத்துக்கு ஈரான் மாற்றியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதில் இருந்து, 10 அணு ஆயுதங்களை தயாரிக்க முடியும் என்று கூறப்படுகிறது. தற்போது ஈரான் அணுஆயுத திட்டங்களை சீரமைத்து வருவதாக தெரிகிறது.
இந்நிலையில் ஐ.நா.வின் அணுசக்தி காண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி அமைப்பு உடனான ஒத்துழைப்பை இடைநிறுத்தம் செய்து ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியன் உத்தரவிட்டுள்ளார். ஈரான் நாடாளுமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், ஜனாதிபதி இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.