விடாமுயற்சி படைக்க உள்ள வரலாற்று சாதனை…
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள படம் விடாமுயற்சி. இப்படத்தை லைகா நிறுவனம் சுமார் 200 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷாவும் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுனும் நடித்துள்ளனர்.
பிப்ரவரி 6ந் தேதி விடாமுயற்சி திரைப்படம் திரைக்கு வர உள்ளது. அப்படத்திற்கான முன்பதிவும் கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் ரிலீஸ் ஆவதால் தமிழில் இதற்கு போட்டியாக எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை.
ஆனால் தெலுங்கில் நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் உருவாகி இருக்கும் தண்டேல் திரைப்படத்தின் தமிழ் டப்பிங் மட்டும் வருகிற பிப்ரவரி 7ந் தேதி திரைக்கு வர உள்ளது. போட்டிக்கு எந்த படமும் ரிலீஸ் ஆகாததால், விடாமுயற்சி படத்தையே தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளிலும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி இப்படத்தின் தமிழக உரிமையை கைப்பற்றி உள்ள ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் இப்படத்தை தமிழகத்தில் மட்டும் 1000 திரைகளில் திரையிட உள்ளதாம்.
இதன்மூலம் புது சாதனை நிகழ்த்த உள்ளது விடாமுயற்சி திரைப்படம். இதற்கு முன்னர் அஜித் நடித்த வலிமை படம் தமிழ்நாட்டில் 950 திரைகளில் ரிலீஸ் ஆனதே சாதனையாக இருந்த நிலையில், அதை விடாமுயற்சி படம் முறியடிக்க உள்ளது.
அதிக திரைகளில் ரிலீஸ் ஆன படங்களின் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை அஜித் படங்கள் ஆக்கிரமித்துள்ள நிலையில், மூன்றாவது இடத்தில் ரஜினியின ஜெயிலர் படம் (850 திரைகள்), நான்காவது இடத்தில் விஜய்யின் லியோ (800 திரைகள்) படமும் உள்ளது.