மத்தியதரை கடலில் விபத்துக்குள்ளான இரு அகதிகள் படகு ; 11 பேர் பலி, 60 பேரைக் காணவில்லை
இத்தாலியின் தெற்குக் கரைக்கு அருகே அகதிகள் பயணம் செய்த இரண்டு படகுகள் உடைந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை.காணாமற்போனோரில் 26 பேர் சிறுவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. உதவிக் குழுக்கள், கடலோரக் காவல்படை அதிகாரிகள், ஐக்கிய நாட்டு நிறுவன (ஐநா) அமைப்புகள் ஆகிய தரப்புகள் திங்கட்கிழமை (ஜூன் 17) இத்தகவலை வெளியிட்டன.
மீட்புப் படகுச் சேவையை நடத்தும் ‘ரெஸ்க்ஷிப்’ எனும் ஜெர்மானிய உதவிக் குழு, மூழ்கிக்கொண்டிருந்த மரப் படகிலிருந்து 51 பேரை மீட்டதாகக் கூறியது. அவர்களில் இருவர் நினைவின்றிக் காணப்பட்டதாகவும் அந்தப் படகின் கீழ்த்தளத்தில் 10 சடலங்களைக் கண்டதாகவும் ‘ரெஸ்க்ஷிப்’ கூறியது.உயிருடன் மீட்கப்பட்டவர்களை இத்தாலியக் கடலோரக் காவல்படையிடம் ஒப்படைத்ததாக அது குறிப்பிட்டது.
அந்தப் படகு லிபியாவிலிருந்து அகதிகளை ஏற்றிச் சென்றதாகவும் அதில் சிரியா, எகிப்து, பாகிஸ்தான், பங்ளாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகள் இருந்ததாகவும் யுனிசெஃப் உள்ளிட்ட ஐநா அமைப்புகள் கூறின.
மற்றொரு படகு இத்தாலியின் கலேப்ரியா வட்டாரத்துக்கு 200 கிலோமீட்டர் கிழக்கே தீப்பிடித்து, கவிழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அப்படகு துருக்கியிலிருந்து புறப்பட்டதாகக் கூறப்பட்டது.
இத்தாலியக் கடலோரக் காவல்படையினர் ஒரு பெண்ணின் சடலத்தையும் 11 பேரை உயிருடனும் மீட்டனர். 64 பேரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
ஈரான், சிரியா, ஈராக் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அப்படகில் சென்றதாகக் கூறப்பட்டது.