‘துருவ நட்சத்திரம்’ வெளியீடு குறித்து கவலை வெளியிட்டுள்ள கெளதம் மேனன்
இயக்குநர் கெளதம் மேனன் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் வெளியீடு குறித்து புலம்பியுள்ளார். இந்த விஷயம் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்து இருக்கும் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.
தமிழ் சினிமாவில் இயக்குநர் கெளதம் மேனனின் காதல் படங்களுக்குத் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அவரது இயக்கத்தில் வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படம் சமீபத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. அப்போது கூட இந்தப் படத்திற்கு ரசிகர்கள் பெரும் வரவேற்புக் கொடுத்தனர். இந்தப் படம் மட்டுமல்லாது, ‘வாரணம் ஆயிரம்’, ‘வேட்டையாடு விளையாடு’ என இவரது படங்கள் ரீ-ரிலீஸுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி கிரேஸ் இருந்தது.
அப்படி இருக்கும்போது, இவரது இயக்கத்தில் நீண்ட நாளாக வெளிவராமல் காத்திருக்கும்படம் தான் ‘துருவ நட்சத்திரம்’. இந்தப் படத்தில் நடிகர்கள் விக்ரம், சிம்ரன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர். பொருளாதார பிரச்சினைகள் காரணமாக இந்தப் படம் வெளியாவதில் தொடர்ச்சியாக சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
இந்தப் பொருளாதார சிக்கலை சரி செய்வதற்காகவே கெளதம் மேனன் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பிரச்சினைகள் முடிந்ததாகச் சொல்லி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பட வெளியீட்டை அறிவித்தார் கெளதம். அந்த சமயத்தில்தான் ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை வெளியிட கூடாது என வழக்குத் தொடர்ந்தது.
ஏனெனில், சிம்புவை வைத்து ஒரு படம் இயக்கி தருவதாக சொல்லி ஏற்கெனவே ரூ. 2 கோடியை கௌதம் மேனன் வாங்கியிருந்தார். ஆனால், அவர் படமும் இயக்கவில்லை பணத்தையும் திருப்பி தரவில்லை என்பதால்தான் இந்த வழக்கு. இதனால், மீண்டும் ‘துருவ நட்சத்திரம்’ வெளியீடு தள்ளிப் போனது.
இந்த விஷயம் குறித்து சமீபத்திய பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, “உங்களைப் போலவே நானும் அதன் வெளியீட்டிற்கு காத்திருந்தேன். ஆனால், அது நடக்காது என்ற போது என் இதயம் நொறுங்கி விட்டது. அமைதி இல்லாமல் இருந்தேன். என் குடும்பமும் இதனால் பாதிக்கப்பட்டது. வெறுமையாக இருந்தது. இந்தப் படத்திற்காக முதலீடு செய்தவர்களை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை. அது ஒரு கெட்ட கனவாக இருந்தது” எனப் புலம்பியுள்ளார்