பயங்கரவாத அமைப்பை தோற்கடிப்பதற்கு அமெரிக்காவே உதவியது – அலிசப்ரி!
உலகின் மிகவும் ஈவிரக்கமற்ற பயங்கரவாத அமைப்பை தோற்கடிப்பதற்கு அமெரிக்காவின் புலனாய்வு தகவல்களே உதவியதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
திருகோணாமலையில் இராணுவதளமொன்றை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளிற்காகவே சமீபத்தில் அமெரிக்காவின் உயர் மட்ட குழுவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் மேற்படி கூறினார்.
அதேநேரம் திருகோணமலையில் இராணுவத்தளம் அமைப்பது குறித்த கருத்துக்களையும் அவர் நிராகரித்துள்ளார்.
நாங்கள் எங்கும் எவரும் இராணுவதளங்களை அமைப்பதற்கு அனுமதிக்கப்போவதில்லை ஆனால் அதன் அர்த்தம் நாங்கள் தனிமையில் வாழ முடியும் என்பதல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடுகளுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு என்பது நீண்ட காலமாக தொடரும் ஒன்று. இது அமெரிக்காவுடன் மாத்திரமானதல்ல என தெரிவித்துள்ள அலி சப்ரி இந்தியா சீனா ஜப்பானுடனும் நீண்டகால பாதுகாப்பு உறவுகள் காணப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
புதிய ஒழுங்குமுறையின் ஒரு பகுதி அனைவரும் இதனை அறிந்துகொண்டுள்ளனர் உணர்ந்துகொண்டுள்ளனர் என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் அதற்கு அப்பால் பல விடயங்கள் குறித்த கருத்துபரிமாற்றத்திற்கான வலையமைப்பை கொண்டிருப்பது அவசியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.