பணத்தால் வாங்கப்பட்ட வெற்றி மக்களால் வழங்கப்பட்ட வெற்றி அல்ல
முதுகுளத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக மதுரை வந்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் எதிர்பார்த்த முடிவை தான் கொடுத்துள்ளது. இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. சராசரியாக வாக்காளர் ஒருவருக்கு ரூபாய் 25 ஆயிரம் வரை செலவழித்து இருப்பதாக நான் அறிகிறேன். அது மட்டுமன்றி அவர்களது அதிகார பலமும் வெற்றியை சாத்தியமாக்கி உள்ளது.
மருங்காபுரி மற்றும் ஆர் கே நகர் இடைத்தேர்தல்களில்தான் ஆளுங்கட்சி தோற்றது. இதற்கிடையில் எந்த இடைத்தேர்தல்களிலும் ஆடுக கட்சி தோற்றதாக வரலாறு இல்லை. ஆகையால் ஈரோடு இடைத்தேர்தலை திமுக ஆட்சிக்கான நற்சான்றிதழாக கொள்ள முடியாது.
அவர்களின் வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை ஆனால் நிறைவேற்றியதாக அவர்களே சொல்லிக் கொள்கிறார்கள். இது வாங்கப்பட்ட வெற்றி தானே தவிர மக்களால் வழங்கப்பட்ட வெற்றி அல்ல.
இரட்டை இலை சின்னம் இருந்ததால் தான் இந்த அளவிற்காவது வாக்குகளை எடப்பாடி பழனிச்சாமி பெற்றுள்ளார். அந்த சின்னமும் இல்லாமல் போயிருந்தால் மிக மோசமான தோல்வி ஏற்பட்டிருக்கும்.
திமுகவுக்கு இணையாக போட்டி போட்டு வாக்காளர்களுக்கு பணமும் பரிசுப் பொருட்களும் வழங்கிய அதிமுகவால் வெற்றி பெற முடியவில்லை. மேற்கு மண்டலமே எங்களது கோட்டை என்று கூறி தேர்தலை சந்தித்தார்கள்.
அதிமுகவைப் பொறுத்தவரை அனைவரும் ஒருங்கிணைந்தால் தான் திமுகவை வருங்காலத்தில் எதிர்கொள்ள முடியும். ஆனால் இதற்கு எடப்பாடி பழனிச்சாமியின் ஆணவம் தடையாக உள்ளது.
பிரிந்து கிடக்கும் அதிமுக காலம் கண்டிப்பாக ஒன்று சேர்க்கும் என நம்புகிறேன். அதிமுகவின் தொடர் தோல்விக்கு எடப்பாடி பழனிச்சாமியே காரணம். அவர் ஆட்சியில் இருந்த நான்காண்டு காலமும் மத்திய அரசின் ஆதரவு இருந்ததால் தான் தாக்குப் பிடிக்க முடிந்தது.
தங்களின் தேர்தல் வெற்றிக்காக திமுகவினர் எந்த அளவிற்கும் இறங்குவார்கள் என்பதற்கு ஈரோடு இடைத்தேர்தலே சாட்சி. வாஜ்பாயோடு கூட்டணியில் இருந்த ஜெயலலிதா அவரது ஆட்சிக்கான ஆதரவை வாபஸ் பெற்ற போது வலிநது முன் சென்று திமுக ஆதரித்தது.
அதேபோல எமர்ஜென்சி காலகட்டத்தில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியை மிகக் கடுமையாக விமர்சனம் செய்த கருணாநிதி பிறகு நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என்று தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். இதுதான் திமுகவின் வரலாறு.
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக கூட்டணி நிலைப்பாடுகள் குறித்து இந்த ஆண்டு டிசம்பரில் அறிவிப்போம் என்றார்.