பிரான்ஸிடமிருந்து 3.25 இலட்சம் கோடி ரூபாவுக்கு 114 ரபேல் போர் விமானங்களை பெறும் இந்தியா
பிரான்சிடமிருந்து 3.25 இலட்சம் கோடி ரூபாவுக்கு 114 ரபேல் போர் விமானங்களை பெறும் முடிவுக்கு ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் எதிர்வரும் 17 ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்கிறார்.
அவரது வருகையின்போது இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதனை முன்னிட்டு, இந்திய விமானப் படைக்கு 114 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான திட்டத்துக்கு, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
முன்னதாக, இந்த கொள்முதலுக்கு பாதுகாப்பு கொள்முதல் சபை கடந்த மாதம் அனுமதி வழங்கி இருந்தது.
ரபேல் போர் விமானத்தை பிரான்சின் டசால்ட் ஏவியேஷன் தயாரிக்கிறது. எனினும், மத்திய அரசு டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் இன்றி, பிரான்ஸ் அரசுடனேயே ஒப்பந்தத்தை மேற்கொள்கிறது. அந்த வகையில் இது இரண்டு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தமாக இருக்கும்.
இந்த ஒப்பந்தத்தின்படி, ரபேல் போர் விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும். இதற்கான தொழில்நுட்ப பரிமாற்றத்தை டசால்ட் ஏவியேஷன் வழங்கும்.
பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலின் அனுமதியைத் தொடர்ந்து , இந்த திட்டத்துக்கு பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன் பிறகே, ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.
ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிரித்துள்ள நிலையில், இந்திய விமானப் படையின் வலிமையை அதிகரிக்க ரபேல் போர் விமானங்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று இந்திய விமானப் படை கோரி வந்தது.
இந்நிலையில் இதன்மூலம், அதன் கோரிக்கை பூர்த்தி செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.





