கொழும்பு, களனி பல்கலைக்கழகங்களுக்குள் பாதுகாப்புத்தரப்பினர் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் அவசியம்
அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள்மீது நடாத்தப்பட்ட வன்முறைத்தாக்குதல்களைக் கடுமையாகக் கண்டிப்பதாகவும், கொழும்பு மற்றும் களனி பல்கலைக்கழக வளாகத்துக்குள் பொலிஸாரும் இராணுவத்தினரும் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில் சுதந்திரமான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் இலங்கையிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் உயர்கல்வி பயிலும் 1000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கையின் அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் மாணவர்களின் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்துக்கு எதிரான ஒடுக்கு முறைகளை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி சேஞ்ச் அமைப்பின் ஊடாக வரதாஸ் தியாகராஜாவினால் இணையவழியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பொதுமனுவில் இலங்கை மற்றும் லண்டன், அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் கல்விபயிலும் 1000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
இவ்வாண்டு பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக அரசாங்கத்தினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் வன்முறை கலந்த ஒடுக்குமுறைகள் தொடர்பில் இந்த மனுவில் கையெழுத்திட்டுள்ள இலங்கையிலும், உலகநாடுகள் பலவற்றிலும் கல்விபயிலும் மாணவர்களாகிய நாம், எமது தீவிர கரிசனையை வெளிப்படுத்துகின்றோம் என்று அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது