அஜித் ரசிகனாக இருப்பது கஷ்டம்: வைரல் குமுறல்!
நடிகர் அஜித் குமார் தற்போது கார் ரேஸிங்கில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். பல ஆண்டுகளாக விளம்பரங்களில் நடிக்காமல் இருந்த அவர், தனது ரேஸிங் குழுவிற்காகவும், இந்தியாவில் கார் ரேஸை பிரபலப்படுத்தவும் தற்போது விளம்பரங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். குறிப்பாக ‘கேம்பா’ (Campa) விளம்பரத்தில் அவர் நடித்தது ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

இந்தச் சூழலில், அஜித் ரசிகர் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், விஜய் ரசிகராக இருப்பதை விட அஜித் ரசிகராக இருப்பது எவ்வளவு கடினம் என்பதை அவர் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக விவரித்துள்ளார்.
விஜய் ரசிகர்கள் அவரது கடைசி படமான ‘ஜனநாயகன்’ மற்றும் அதன் ஆடியோ லான்ச் குறித்து கவலைப்படுவதைக் கண்ட அந்த ரசிகர், “உங்க ஆளோட கடைசி ஆடியோ லான்ச்னு வருத்தப்படுறீங்களே, கடைசியா எங்க ஆளுக்கு எப்போ ஆடியோ லான்ச் நடந்ததுன்னு சொல்லுங்கடா? எங்களுக்கு அப்படி ஒன்னு நடந்தே பல வருஷம் ஆச்சு. நாங்க அதையெல்லாம் தாங்கிட்டு தானே நிக்கிறோம்” என்று ஆவேசமாகக் கேட்டுள்ளார்.

அஜித்தை ‘எம்டன் மகன்’ படத்தில் வரும் கண்டிப்பான அப்பா நாசருடன் ஒப்பிட்டு அவர் பேசியதுதான் ஹைலைட். “உங்களுக்கு விஜய் அண்ணன் தம்பி மாதிரி. ஆனா எனக்கும் அஜித்துக்கும் அப்பா-பையன் உறவுடா. அதுவும் சாதாரண அப்பா இல்ல, ‘எம்டன் அப்பா’. எப்போ பாரு திட்டீட்டே இருப்பாரு. உலகத்துல எந்த ரசிகராவது தன் ஹீரோவை பார்த்து பயந்து இருக்காங்களா? நாங்க அஜித்தை பார்த்து பயப்படுறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
அது மட்டும் அல்ல விஜய் ரசிகர்கள் தங்களது ஹீரோவை தளபதி, தலைவர், முதலமைச்சர் என அடுத்தடுத்த நிலைக்குக் கொண்டு செல்வதைச் சுட்டிக்காட்டிய அவர், “நாங்க அல்டிமேட் ஸ்டார்னு கூப்பிட்டோம், வேணாம்னாரு. தல-னு கூப்பிட்டோம், அதுவும் வேணாம்னாரு. இப்போ AK-னு கூப்பிடுறோம், நாளைக்கு அதுவும் வேணாம்னு சொல்லிடுவாரு. நாங்க எதுவுமே இல்லாம சுத்தப்போறோம். உங்களுக்கு விஜய்க்கும் ‘டபுள் சைடு லவ்’, ஆனா எனக்கும் அஜித்துக்கும் ‘ஒன் சைடு லவ்’ தான்” என்று ரத்தக்கண்ணீர் சிந்தாத குறையாகக் குமுறியுள்ளார்.

இந்த வீடியோ அஜித் ரசிகர்களின் தற்போதைய மனநிலையை அப்படியே பிரதிபலிப்பதாக உள்ளது. அஜித்திடம் இருந்து பெரிய அப்டேட்கள் வராதது, அவர் ரசிகர்களைத் தள்ளி வைப்பது போன்ற விஷயங்கள் ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்தாலும், அவர் மீதான அன்பு குறையவில்லை என்பதை இந்த வீடியோ காட்டுகிறது.





