சிங்கப்பூரில் டிஷ்யூ பேப்பரில் தனது இராஜினாமா கடிதத்தை எழுதிய பெண்

சிங்கப்பூரில் ஊழியர் ஒருவர் டிஷ்யூ பேப்பரில் தனது இராஜினாமா கடிதத்தைக் கொடுத்து நிறுவனத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
ஆஞ்சிலா யோஹ் என்ற பெண் தொழிலதிபர் இச்சம்பவத்தை தனது LINKEDIN பக்கத்தில் பதிவிட்டு, ஊழியர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.
வைரலாகி வரும் அந்த இராஜினாமா கடிதத்தில், “நான் தேவைப்படும்போது பயன்படுத்தப்படும் கழிப்பறை காகிதத்தைப் போல உணர்ந்தேன், எந்தவொரு இரண்டாம்பட்ச சிந்தனையைக் கூட இல்லாமல் தூக்கி எறியப்பட்டேன்” என கவலையுடன் பதிவிட்டுள்ளார். மேலும், “இந்த நிறுவனம் என்னை எவ்வாறு நடத்தியது என்பதற்கான அடையாளமாக தான், இந்த வகையான காகிதத்தை எனது இராஜினாமா கடிதத்தை எழுத தேர்ந்தெடுத்துள்ளேன்” என்று எழுதப்பட்டிருந்தது.
நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை எப்படி நடத்த வேண்டும் என ஆஞ்சிலா யோஹ் கருத்து தெரிவித்துள்ளார். “உங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை நல்ல செயல்களுக்காக பாராட்ட வேண்டும். அவர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேற முடிவு செய்தாலும் கூட, மனக்கசப்புடன் வெளியே செல்லக் கூடாது, நன்றி உணர்வுடன் வெளியேற வேண்டும். பாராட்டு என்பது ஒருவரை தக்கவைத்துக் கொள்வதற்கான ஒரு கருவி மட்டுமல்ல. ஒரு நபர் எவ்வளவு மதிக்கப்படுகிறார் என்பதற்கான பிரதிபலிப்பு, அடையாளம். ஒருவரை பாராட்டுவதில் சிறிய தடுமாற்றம் ஏற்பட்டால் கூட, அது அவருக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன” எனப் பதிவிட்டுள்ளார்.