கொலை செய்தவர்களே விசாரணை செய்தால் நியாயம் கிடைக்குமா? – முன்னாள் தவிசாளர் தவராசா
கொக்குதொடுவாய் விடயம் கொலையை செய்தவர்களே விசாரணைகளை செய்தால் எந்த முறையில் நியாயம் கிடைக்கும் என கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் க.தவராசா தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
இன்று சர்வதேச சமாதான தினம் ஆனால் 30 ஆண்டுகளுக்கு மேலாக சமாதானம் அற்றவர்களாக இலங்கையிலே பெரும் பகுதியான தமிழ் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
எங்களுடைய நாட்டிலே யுத்த குற்றம் இடம்பெற்றது. அதில் சாட்சியாக நானே இருக்கின்றேன். கொத்துக் குண்டு விழுந்து என்னுடைய நண்பர்கள் இறந்ததையும், பொஸ்பரஸ் குண்டுகள் விழுந்து முகாம்கள் எரிந்ததையும் நேரில் கண்டேன்.
சனல் 4 னை பற்றி சிங்கள அமைச்சர்கள் இது பொய்யான விடயம் என கூறுகிறார்கள் . ஆனால் கடந்த அறிக்கையின் போது இசைப்பிரியா கடலுக்குள் இருந்து எடுத்து வரப்பட்டு மானவாங்கப்படுத்தப்படுகிறாள் பின்னர் அவள் சடலமாக கிடக்கிறாள்.
பாலசந்திரன் பிஸ்கட் சாப்பிடுகிறான் பின்னர் சடலமாக காணப்பட்டான். அதேபோல் றமேஸிடம் விசாரிக்கப்படுகிறார் பின்னர் இறந்துவிட்டார் அதையும் நாங்கள் கண்டோம்.
இவ்வாறு கண்முன்னே கண்டவற்றை பொய் என கூறிக்கொண்டு இருக்கிறார்கள். இலங்கையில் அமைச்சர்கள் தொடக்கம் ஜனாதிபதி வரை எல்லோரும் பொய்களை கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.
சனல் 4 ல் வந்த குற்றங்களை விசாரிப்பதற்கு வேண்டாம் என கூறிய சிங்கள தலைவர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு சர்வதேச விசாரணை வேண்டும் என கேட்கிறார்கள்.
இலட்சக்கணக்காக கொல்லப்பட்ட போது எங்களுக்கு ஒரு நியாயமும் இல்லை. நூற்றுக்கணக்காக கொல்லப்பட்டவர்களுக்கு மட்டும் நியாயம் கோருவது எவ்வகையில் நியாயம்.
அதேபோல் கொக்குதொடுவாயிலே கிடக்கின்ற பிள்ளைகளுடைய சடலங்கள், கொலை செய்யப்பட்டு தாக்கப்பட்டுள்ள தடயங்கள், உடுப்புக்கள் இருக்கின்றது.
அதனை இலங்கையை சேர்ந்தவர்களே விசாரிக்க போகின்றார்கள். கொலையை செய்தவர்களே விசாரணைகளை செய்தால் எந்த முறையில் நியாயம் கிடைக்கும் என எதிர் பார்க்க முடியும்.
நிச்சயமாக எந்த குற்றவாளிகளும் இவர்களது விசாரணையில் கண்டு பிடிக்க மாட்டார்கள். உயிர்த்த ஞாயிறு தாக்குதலிலும் குற்றவாளிகளுக்கு எந்தவித தண்டனையும் வழங்கப்பட மாட்டாது.
உள்ளூர் விசாரணை என்ற பெயரில் அனைத்து விடயங்களும் மழுங்கடிக்கப்பட்டு நீதியை குழி தோண்டி புதைத்துவிடுவார்கள். அதனால் தான் சர்வதேசத்தை கேட்டு நிற்கின்றோம்.
சர்வதேசம் நீதியானதாக , நியாயமானதாக இருந்தால் இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என அழிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மக்கள் சார்பாக கேட்டு கொள்கிறேன் என மேலும் தெரிவித்தார்.