பொங்கலன்று சர்ஃப்ரைஸ் செய்ய காத்திருக்கும் சன் பிக்சர்ஸ்… ஒரு வேல அப்படி இருக்குமோ?
ரஜினிகாந்த் மற்றும் விஜய் படங்களை அதிகளவில் தயாரித்து வந்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் புதிய படத்தின் அறிவிப்பு டீசரையும் வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்தை தயாரித்தது. அதன் பிறகு சர்கார், பேட்ட, நம்ம வீட்டு பிள்ளை, காஞ்சனா 3, அண்ணத்த, எதற்கும் துணிந்தவன், பீஸ்ட், திருச்சிற்றம்பலம், ஜெயிலர், ராயன் என்று வரிசையாக பல படங்களை தயாரித்துள்ளது.
இப்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகர்ஜூனா, உபேந்திரா, சத்யராஜ், ரெபா மோனிகா ஜான், அமீர் கான், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் கூலி.
இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு திரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்த நிலையில் இன்னும் குறைவான பகுதிகள் மட்டும் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அதுவும் பொங்கலுக்கு பிறகு படமாக்கப்படும் என்று தெரிகிறது. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் தான் இந்தப் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் தனது 172ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படம் ஜெயிலர் படத்தின் 2ஆம் பாகம் என்று சொல்லப்படுகிறது. இந்தப் படத்தையும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு, இதில் ரஜினிகாந்தின் ஜெயிலர் கதாபாத்திர காட்சிகள் இருக்கும் என்று தெரிகிறது.
எனினும் இது குறித்து முறையான அறிவிப்பு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சன் பிக்சர்ஸ் வெளியிடும் என்று தெரிகிறது. இது தொடர்பான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில், சூப்பர் ஃபேன்ஸ், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்பு டீசர் ஒரு சில திரையரங்குகளில் மட்டும் வெளியாகும். அதுவும் சென்னை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், பெங்களூரு, திருவனந்தபுரம், பாலக்காடு, மும்பை ஆகிய ஊர்களில் உள்ள திரையரங்குளில் இந்த அறிவிப்பு டீசர் வெளியாகும்.
அதோடு தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டீசர் வெளியாக இருக்கிறது. மேலும் 14ஆம் தேதி மாலை 6 மணிக்கு தான் இந்த அறிவிப்பு டீசர் வெளியாகிறது என்று அறிவித்துள்ளது. கொண்டாட தயாராக இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளது.
இது ரஜினிகாந்தின் படமாகத்தான் இருக்கும் என்று ஒவ்வொருவரும் இப்போதே கொண்டாட தொடங்கிவிட்டனர். அதோடு, அது ஜெயிலர் படத்தின் 2ஆம் பாகம் என்று சொல்லப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்கப்பட இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வருகிறது.