சாம் சிஎஸ்-க்கு கிடைக்காத வாய்ப்பு சாய் அபயங்கருக்கு குவிய காரணம் என்ன?

தமிழ் சினிமாவில் தற்போது பிசியான இசையமைப்பாளராக வலம் வருபவர் சாய் அபயங்கர் தான். அவர் இசையில் இன்னும் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகாவிட்டாலும் தற்போது கைவசம் 8 படங்களை வைத்திருக்கிறார்.
அவர் பாடகர் திப்பு – ஹரிணி ஜோடியின் மகன் என்பதால் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருவதாகவும், இவரால் சாம் சி.எஸ். போன்ற திறமையான இசையமைப்பாளருக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில், சாய் அபயங்கரோடு தன்னை ஒப்பிட்டு போடப்படும் மீம்கள் குறித்து முதன்முறையாக மனம்திறந்து பேசி உள்ளார் சாம் சி.எஸ்.
அதன்படி மக்கள் மனசார ஃபீல் பண்ணி தனக்காக கமெண்ட் போடுவதை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என கூறி உள்ள சாம், அதே நேரத்தில் நானே இதுபோன்று பதிவிட்டு எனக்கான பி.ஆர் வேலைகளை செய்து வருகிறேனா என ஒருவர் கேட்டார்.
ஒருவேளை நான் தான் அப்படி போட்டேன் என ஆதாரத்துடன் ஒருவர் சொல்லிவிட்டால் நான் சினிமாவை விட்டே விலகி விடுகிறேன் என ஓப்பனாக சவால்விட்டதாக சாம் சி.எஸ் தெரிவித்துள்ளார்.
சாய் அபயங்கர் பற்றி கூறுகையில், சாய் திறமைவாய்ந்த மியூசிசியன் என்பது எனக்கு தெரியும். அவரை புக் பண்ணிய இயக்குனர்களுக்கு தெரியும். ஆடியன்ஸுக்கு ஏன் தெரியவில்லை என்றால் அவருடைய படங்கள் எதுவுமே இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. ஆனால் நிஜமாகவே அவருக்கு நிறைய திறமை இருக்கிறது. அவர் நிறைய பாடல்களை பண்ணி வைத்திருக்கிறார்.
அவரை கமிட் பண்ணிய டைரக்டர்கள் அவருடைய ஒர்க் பிடித்து தான் பண்ணுகிறார்கள். அவருமே எந்தவித பி.ஆர் வேலைகளும் செய்து வரவில்லை. அவருடைய 2, 3 பாடல்கள் தான் ரிலீஸ் ஆகிருக்கு அதுக்குள்ள எப்படி இவ்ளோ வாய்ப்பு என்று தான் கேட்கிறார்கள்.
அவருடன் சேர்த்து வைத்து என்னையும் சொல்கிறார்கள். சொல்லப்போனால் சாய் ரொம்ப நல்ல பையன். இப்போ தான் அவர் இசையமைக்க ஆரம்பித்திருக்கிறார். அவர் வளர வேண்டும் என்றுதான் நான் ஆசைப்படுகிறேன்.
சாய் அபயங்கரின் தந்தை திப்பு எனக்கு நல்ல பழக்கம். அவருடைய படங்கள் ரிலீஸ் ஆனால் இந்த விமர்சனங்கள் குறையும் என நினைக்கிறேன். நமக்கு ஏன் இந்த படம் கிடைக்கவில்லை என நான் ஃபீல் பண்ணியது இல்லை. அடுத்ததாக நான் தனுஷ் சார் படத்துக்கு முதன்முறையாக இசையமைக்கிறேன். அப்படத்தை எச்.வினோத் இயக்க உள்ளார் என சாம் சி.எஸ் கூறினார்.