வைஜெயந்தி மாலாவுக்கு என்ன ஆச்சு?… உண்மை என்ன?

பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலாவின் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவி வரும் நிலையில், அதற்கு அவரது மகன் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியாவின் 3வது மிகப்பெரிய விருதாக கருதப்படும் பத்மபூஷன் விருது பெற்றவர் பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலா. சினிமா நடிகையாக மட்டுமல்லாமல் பரத நாட்டிய கலைஞராகவும் அறியப்படுகிறார்.
1949-ம் ஆண்டு வெளியான ‘வாழ்க்கை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.
குறிப்பாக 1995-ம் ஆண்டு வெளியான ‘தேவதாஸ்’ படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றார்.
பாலிவுட் நடிகர் ராஜ்கபூரின் குடும்ப மருத்துவர் சமன்லால் பாலியை திருமணம் செய்துகொண்டார். பின்னர் சினிமாவிலிருந்து விலகினார். காங்கிரஸ், பாஜக என வெவ்வேறு அரசியல் கட்சிகளில் தனது பயணத்தை தொடர்ந்தார்.
91-வயதான வைஜெயந்தி மாலா உடல்நிலை குறித்து வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில் இது தொடர்பாக அவரது மகன் சுசீந்திர பாலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“வைஜெயந்தி மாலா நல்ல உடல்நலத்துடன் ஆரோக்கியமாக இருக்கிறார். அவரைப்பற்றி வரும் தகவல்கள் வதந்தியே. செய்தியை பகிர்வதற்கு முன் சரிபார்க்கவும்” என தெரிவித்துள்ளார்.