சிம்ப்பிளாக நடந்தது விவேக் மகளின் திருமணம்.. வந்தவர்களை நெகிழ்ச்சியடையச் செய்த சம்பவம்
நடிகர் விவேக் மறைந்தாலும் இன்றளவில் மக்கள் மனதில் வாழும் சிறந்த நகைச்சுவை நடிகராவார்.
பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட அவர் பல படங்களில் நடித்திருக்கிறார். தன்னுடைய காமெடியில் பகுத்தறிவு கருத்துக்களையும், சமூகத்துக்கு தேவையான கருத்துக்களையும் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தவர் விவேக்.
மேலும் மரக்கன்றுகளையும் நட்டார். சூழல் இப்படி இருக்க அவர் 2021ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கும் பேரிழப்பாகும்.
டிகிரி முடித்துவிட்டு அரசாங்க வேலை பார்த்துக்கொண்டிருந்தவருக்கு சினிமா மீது எப்போதும் தீராத ஆர்வம் இருந்தது. அதன் காரணமாக ஒருபக்கம் வேலையை பார்த்துக்கொண்டு மறுபக்கம் சினிமா வாய்ப்பையும் விடாமல் தேடிக்கொண்டிருந்தார்.
தீவிர தேடுதலுக்கு பிறகு இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கிய மனதில் உறுதி வேண்டும் படத்தின் மூலம் கடந்த 1987ஆம் ஆண்டு நடிகராக அறிமுகமானார் விவேக்.
முதல் படத்தின் வெற்றி, விவேக்கின் சிறந்த நடிப்பை அடுத்து தொடர்ந்து வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்தார். ஆனால் இரண்டு வருடங்கள் கழித்தே அவருக்கு அடுத்த வாய்ப்பு கிடைத்தது.
கே.பாலசந்தர் 1989ஆம் ஆண்டு இயக்கிய புது புது அர்த்தங்கள் படத்தில் மீண்டும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய அவருக்கு அடுத்து வாய்ப்புகள் தொடர்ச்சியாக கிடைக்க ஆரம்பித்தன.
தொடர்ந்து பல படங்களில் நடித்துவந்த அவர் கடந்த 2021ஆம் ஆண்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
விவேக்குக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் இருந்தார். இவர்களில் மகன் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இந்தச் சூழலில் விவேக்கின் மூத்த மகள் தேஜஸ்வினியின் திருமணம் நேற்று சிம்ப்பிளாக நடந்து முடிந்தது.
அவர் சிரஞ்சீவி பரத் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்தில் உறவினர்களும், நெருங்கிய நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டனர்.
அதேசமயம் நேற்று முன் தினம் நடந்த திருமண வரவேற்பில் பிரபலங்கள் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.
இந்தத் திருமணத்தில் கலந்துகொண்டவர்களுக்கு மரக்கன்றும், மூலிகைச் செடிகளும் வழங்கப்பட்டன. ஏற்கனவே விவேக் உயிரோடு இருந்தபோது இந்த மண்ணின் நன்மைக்காக ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் செயலை தொடங்கி தொடர்ந்து செய்துவந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது தேஜஸ்வினியின் திருமணத்தில் மரக்கன்றுகள் கொடுக்கப்பட்டது அனைவரிடமும் பாராட்டையும் பெற்றிருக்கிறது.