100 அடி கம்பத்தால் நொருங்கிய கார்… புதிய கார் கொடுக்கும் விஜய்

.மதுரை தவெக மாநாட்டில் 100 அடி கம்பத்தை நடும் போது அது அப்படியே சாய்ந்ததில் இன்னோவா கார் சேதமடைந்த நிலையில் புதிதாக அதே நிறுவன காரை வாங்கித் தருவதாக தவெக தலைவரும் நடிகருமான விஜய் உறுதி அளித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாடு கடந்த 20 ஆம் தேதி நடைபெற்றது. இது அக்கட்சியின் 2ஆவது மாநில மாநாடு ஆகும்.
முதல் மாநாட்டை போல் இந்த 2ஆவது மாநாட்டின் முகப்பிலும் 100 அடி உயர கொடிக் கம்பம் அமைக்கப்பட்டு மாநாடு தொடங்கும் போது அதை தவெக தலைவர் விஜய் ஏற்றி வைக்க திட்டமிடப்பட்டிருந்தது.
இதற்காக 30 டன் எடையை தாங்கும் ராட்சத கிரேன் மூலம் கொடிக் கம்பத்தை நிறுத்த நிர்வாகிகள் முயன்றனர். அப்போது கிரேனின் பெல்ட் அறுந்து கொடிக் கம்பம் கீழே சாய்ந்தது. இதில் கம்பம் இரண்டாக உடைந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த நிர்வாகியின் இன்னோவா கார் மீது விழுந்து கார் கடுமையாக சேதமடைந்தது.
எனினும் காரில் யாரும் இல்லாததால் எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை. சேதமடைந்த கார், கொடிக் கம்பம் அகற்றப்பட்டு மாநாடும் நடைபெற்றது. இந்த நிலையில் நிர்வாகிக்கு புதிய இன்னோவா கார் வாங்கித் தரப்படும் என விஜய் உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.