ரத்தம் தெறிக்கும் கத்தியுடன் விஜய் சேதுபதி… “விடுதலை 2” ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்
இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் விடுதலை பாகம் 1. இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இவர்களுடன் இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், தமிழ் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருந்தார்.
படம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் ரிலீஸ் ஆகி பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டிருந்த கதாபாத்திரங்கள் படத்தின் தன்மைக்கு முற்றிலும் பொருந்திப் போனார்கள். இதனால் படம் மாபெரும் வெற்றிப் படமாக மாறியது. குறிப்பாக நடிகர் சூரி, இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
இந்நிலையில் விடுதலை 2 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அண்மையில் தொடங்கப்பட்டது என தகவல் வெளியானது. தற்போது படக்குழு தரப்பில் இருந்து விடுதலை 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை விஜய் சேதுபதி தனது எக்ஸ் பக்கத்தில் ரிலீஸ் செய்துள்ளார். மொத்தம் இரண்டு வகை போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒன்றில் விஜய் சேதுபதி கையில் ரத்தம் சொட்டும் கத்தியுடன் மிகுந்த கோபத்துடன் இருக்கின்றார்.
மற்றொன்றில், சைக்கிளைப் பிடித்தபடி, மஞ்சு வாரியருடன் நிற்கின்றார். ஒரு போஸ்டரைப் பார்த்தால் ரத்தம் தெறிக்கிறது, மற்றொரு போஸ்டரைப் பார்த்தால் காதல் ததும்புகின்றது.
இதன் மூலம் விடுதலை 2 படத்தில் பெரும்பகுதி விஜய் சேதுபதி கதாபாத்திரத்தின் ஃப்ளாஷ் பேக் காட்சிகளாகத்தான் இருக்கும் என தெளிவாகின்றது.
மேலும் போஸ்டரில் திருக்குறளில் இடம் பெற்றுள்ள பகைத்திறந் தெரிதல் அதிகாரத்தில் உள்ள “உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார்” என்ற குறளும் இடம் பெற்றுள்ளது.






