பெரிய விளாத்திக்குளம் பிரதான வீதி பிரச்சினை! அறிக்கை சமர்ப்பிக்குமாறு புகையிரத திணைக்களத்தினருக்கு நீதிபதி பணிப்புரை
வவுனியா பெரிய விளாத்திக்குளம் பிரதான வீதியை தமது பாவனைக்கு வழங்க வேண்டும் என கிராம மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் குறித்த வீதியை வவுனியா நீதிவான் நீதிமன்ற நீதிபதி இன்று (07.07.2023) பார்வையிட்டிருந்தார்.
வவுனியா பெரிய விளாத்திக்குளம் பிரதான வீதி ஓமந்தை புகையிரத நிலையம் அமைப்பதற்காக 2012 ஆம் ஆண்டளவில் நிரந்தரமாக மூடப்பட்டு மக்கள் பாவனைக்காக பல கிலோ மீற்றர் சென்று கிராமத்திற்கு வரும் வகையில் பிறிதொரு பாதை வழங்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் தமது பழைய பாதையை மீள வழங்க வேண்டும் என கோரி கிராம மக்கள் போராட்டங்களை நடத்தியிருந்தார்கள்.
இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு ஓமந்தை பொலிஸார் ஊடாக கிராம மக்கள் வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில், கடந்த வழக்கு விசாரணையின் போது நீதவான் நீதிபதி இன்றைய தினம் குறித்த இடத்தை பார்வையிட வருவதாக தெரிவித்திருந்தார்.
இதன் பிரகாரம் இன்று பிற்பகல் ஓமந்தை புகையிரத நிலையப்பகுதிக்கு வருகை தந்த நீதிபதி மூடப்பட்ட பாதை மற்றும் தற்போதைய பாதைகளை பார்வையிட்டதுடன் புகையிரத திணைக்கள பொறியியலாளர் மற்றும் கிராம மக்கள் சார்பிலான சட்டத்தரணி ஜனாதிபதி சட்டத்தரணி எம் ஏ. சுமந்திரன், கிராம மக்களுடன் கலந்துரையாடிய நீதிபதி மக்களின் இலகுவான பயணத்திற்கு ஏதுவான எடுக்ககூடிய நடவடிக்கைகள் தொடர்பில் புகையிரத திணைக்களத்தினரிடம் கேட்டறிந்தார்.
இதனையடுத்து புகையிரத திணைக்களத்தின் பொறியியலாளர் கிராம மக்கள் கோரிய இடத்தில் முற்சக்கரவண்டிகளுக்குட்பட்ட வாகனங்கள் செல்லக்கூடிய விதத்தில் பாதை அமைத்து தருவதாக தெரிவித்ததுடன் பார ஊர்திகள் தற்போது பயன்படுத்தப்படும் பாதையினூடாகவே பயணிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதனை கிராம மக்கள் ஏற்றுக்கொண்டனர்.
இதனையடுத்து இரண்டு வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதி புகையிரத திணைக்களத்தினருக்கு தெரிவித்து குறித்த பாதை விவகாரம் தீர்வை எட்டியுள்ளதுடன் அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் 21 திகதி இடம்பெறவுள்ளது.