வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படும் காதலர் தினம்!
உலகெங்கும் காதலர் தின கொண்டாட்டம் பிப்ரவரி 14-ம் திகதியில் நடக்கிறது. ஆனால், உலகின் சில பகுதிகளில் வெவ்வேறு தினங்களில் , வெவ்வேறு வகைகளில் கொண்டாடப்படுகிறது அவைகளின் தொகுப்பே இது.
இங்கிலாந்து நாட்டின் வேல்ஸ் பகுதியில் ஜனவரி – 25 ‘செயின்ட் தயான் வென்ஸ்’ நாளைத்தான் காதலர் தினமாகக் கொண்டாடுகிறார்கள். அப்போது காதலர்கள் தங்களுக்குள் மரத்தில் செதுக்கப்பட்ட ஸ்பூன்களை அன்பின் பரிசாக பரிமாறிக்கொள்கிறார்கள்.
தென் கொரியாவில் ஒவ்வொரு மாதத்திலும் வரும் 14-ம் தேதியை காதல் தினமாகக் கொண்டாடுகிறார்கள். மே மாதம் 14-ம் தேதியை ரோஜா தினம் என்றும், ஜூன் 14-ம் தேதியை முத்த நாள் என்றும், டிசம்பர் 14-ம் தேதியை தழுவல் தினமாகவும் ஏப்ரல் 14-ம் தேதியை கருப்பு தினம் என்றும் கொண்டாடுகிறார்கள். இந்த கருப்பு தினத்தில் காதலி கிடைக்காத பிரம்மச்சாரிகள் தனியாக உட்கார்ந்து கருப்பு நூடுல்ஸ்யை சாப்பிட்டு தங்களது வருத்தத்தை வெளிக்காட்டுகிறார்கள்!
ஜப்பான் நாட்டில் ஜப்பானிய பெண்கள் பிப்ரவரி 14-ம் தேதியை காதலர் தினமாக கொண்டாட, மார்ச் 14-ம் தேதியை ஜப்பானிய ஆண்கள் காதலர் தினமாகவும் கொண்டாடுகிறார்கள். அந்நாளை ‘வெள்ளை தினம்’ என்கிறார்கள். பெண்கள் தங்கள் காதலர்களுக்கு காதல் பரிசாக சாக்லேட் கொடுத்து மகிழ்கின்றனர்.
ருமேனியாவில் பிப்ரவரி 24-ம் தேதியை காதலர்கள் தினமாகவும், அந்நாட்டு வசந்த விழாவாகவும் கொண்டாடி மகிழ்கின்றனர். அன்றைய தினம் ஆண் பிள்ளைகள் மற்றும் பெண் பிள்ளைகள் காடுகளுக்குள் சென்று அழகான மலர்களை பறித்து தங்களுக்குள் பரிசளித்து மகிழ்கின்றனர். மேலும், சிலர் முகத்தில் பனிக்கட்டிகளை பூசி விளையாடுகிறார்கள்.
செக்கோஸ்லோவியாவில் மே முதல் நாள் காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் காதலர்கள் கவிஞர் கார்ல் ஹெய்னிக் மாசே சிலை உள்ள பூங்கா சென்று அங்குள்ள செர்ரி பிளாசம் செடிகள் கீழ் உள்ள பகுதிகளில் முத்தமிடுகிறார்கள். இப்படி செய்வதால் நல்லது நடக்கும் என்று நம்புகிறார்கள்.
ஸ்பெயின் நாட்டில் அக்டோபர் 9-ம் தேதியை காதலர் தினமாக கொண்டாடுகிறார்கள். அது செயின்ட் டைனோசியஸ் என்ற காதல் துறவியின் புனித தினம். அன்று காதலர்கள் தங்களது காதலிகளுக்கு மக்டோரா என்ற பழங்களை பரிசாக வழங்குகிறார்கள்.
சீனாவில் அவர்களின் 7-வது மாதம் 7-வது நாள் காதலர் தினம். அதை குச்சி விழா என்கிறார்கள். இந்த நாளில் ஆண்கள் பெண்களுக்கு பழங்கள், மலர்களை கொடுத்து அவர்களை இம்ப்ரஸ் செய்ய முயல்கிறார்கள். சில பகுதிகளில் பெண்கள் கலர் கலராக அரிசி உணவுகளை சமைத்து அதை பட்டுத்துணியில் வைத்து தங்களுக்கு பிடித்த ஆண்களுக்கு வழங்குவார்கள். அந்த உணவில் இரண்டு சாப்பாட்டு குச்சியை வைத்து இருந்தால் காதலுக்கு ஓ.கே என்றும், வெள்ளை பூண்டு துண்டு ஒன்று இருந்தால் காதல் முறிவு என்றும் அர்த்தம் கொள்கிறார்கள்.
இத்தாலி நாட்டில் காதலர் தினத்தில் குருட்டுத்தனமான பழக்கவழக்கத்தை கடைப்பிடிக்கிறார்கள். அதன்படி காதலர் தினத்தன்று இளம் பெண்களின் கண்களில் முதலில் தென்படும் ஆண்களையே காதலராக ஏற்றுக்கொள்கிறார்கள். அது யாராக இருந்தாலும் சரி. இதனால் அன்றைய தினத்தில் தங்களது காதலியின் வீட்டு வாசலிலேயே காதலர்கள் காத்துக்கிடக்கிறார்கள்.
தைவான் நாட்டில் காதலர் தினத்தில் ரோஜா மலர்களை காதல் சின்னமாக பயன்படுத்துகிறார்கள். காதலர்கள் தங்களது காதலிக்கு கொடுக்கும் ரோஜா மலர்களின் அளவுகளை வைத்து தங்களது காதலின் ஆழத்தை வெளிக்காட்டுகிறார்கள். 99 ரோஜா மலர்கள் கொண்ட பூங்கொத்து காதலை வெளிக்காட்ட பரிசளிக்கப் படுகிறது.அதேபோல் 108 ரோஜாக்கள் அடங்கிய பூங்கொத்து திருமண விண்ணப்பமாக காதலர்கள் பரிமாறிக்கொள்கிறார்கள். இப்படி ரோஜாக்களின் எண்ணிக்கையை வைத்து அங்கே காதலை வளர்க்கிறார்கள்.
ஜெர்மன் நாட்டில் பன்றிக்குட்டியும், இஞ்சி மிட்டாயும்தான் காதல் சின்னங்கள். காதலர் தினத்தில் இவைகளைத்தான் பரிசாக கொடுத்து காதலர் தினத்தை கொண்டாடி மகிழ்கின்றனர். அதிலும் வெள்ளை பன்றிக்குட்டியும், இஞ்சி மிட்டாயும் உண்ணக்கொடுத்தால் “நான் திருமணத்திற்கு தயார். நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?’” என்று கேட்பதாக அர்த்தமாம்.