UK புலம்பெயர் மாற்றங்கள் – அடுத்த வாரம் முதல் அதிரடியாக அமுலுக்கு வருகிறது
பிரித்தானிய அரசு 2026 ஜனவரி முதல் தனது புலம்பெயர்வு முறையில் பெரிய மாற்றங்களை அமுல்படுத்துகிறது.
இந்த மாற்றங்களின் முக்கிய நோக்கம், நாட்டுக்குள் வருகிற புலம்பெயர்வோரின் மொத்த எண்ணிக்கையை, அதாவது Net Migration ஐ குறைப்பதே ஆகும்.
இதன் மூலம் வேலை, குடியிருப்பு மற்றும் சமூக வளங்களின் மீது ஏற்படும் அழுத்தத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது.
இந்த மாற்றங்களில் மிகவும் முக்கியமானது, வேலை சார்ந்த விசாக்களுக்கான ஆங்கில மொழித் திறன் தொடர்பான விதி.
2026 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி முதல், வேலை விசா பெற விரும்புவோர் CEFR (Common European Framework of Reference for Languages) அளவுகோலின் படி B2 நிலை ஆங்கிலத் திறன் கொண்டிருக்க வேண்டும்.
இது A-level அல்லது 12ஆம் வகுப்பு தரத்திற்கு இணையானதாகும். இதற்கு முன்பு B1 நிலை போதுமானதாக இருந்த நிலையில், இந்த மாற்றம் பலருக்கு சவாலாக இருக்கும். குறிப்பாக பட்டதாரிகள், Skilled Worker Visa மற்றும் Scale-up Visa விண்ணப்பதாரர்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் ஒரு முக்கியமான விளக்கம் என்னவென்றால், ஏற்கனவே UK வில் வேலை விசா பெற்று இருப்பவர்கள், தங்கள் விசாவை நீட்டிக்கும் போது இந்த புதிய B2 ஆங்கில விதி பொருந்தாது.
அதனால் தற்போது UK வில் சட்டபூர்வமாக வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு உடனடி பாதிப்பு ஏற்படாது.
இந்த மாற்றங்களின் இன்னொரு முக்கிய அம்சம், Indefinite Leave to Remain (ILR) எனப்படும் நிரந்தர குடியிருப்பு அனுமதியுடன் தொடர்புடையது.
இதுவரை UK வில் 5 ஆண்டுகள் இருந்தால் ILR க்கு விண்ணப்பிக்க முடிந்தது. ஆனால் புதிய விதிகளின் படி, இந்த தகுதி காலம் 10 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, பலர் நிரந்தர குடியுரிமையை பெற இரட்டை காலம் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
மேலும் சில சூழ்நிலைகளில், இந்த காத்திருப்பு காலம் 20 ஆண்டுகள் வரை கூட நீடிக்கலாம்.
குறிப்பாக சமூக நலன்கள் பெற்றவர்களுக்கு இது பொருந்தும். 12 மாதங்களுக்கு குறைவாக சமூக நலன்கள் பெற்றிருந்தால், ILR க்கு விண்ணப்பிக்க 15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
நீண்டகாலமாக சமூக நலன்கள் பெற்றவர்களுக்கு இந்த காலம் 20 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Brexit க்கு முன்பு சுகாதார மற்றும் பராமரிப்பாளர் விசாக்களின் கீழ் பிரித்தானியாவுக்கு வந்தவர்களுக்கும் இந்த மாற்றங்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
இவர்கள் முன்பு 5 ஆண்டுகளில் ILR க்கு தகுதி பெற்ற நிலையில், இனிமேல் 15 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
இது அந்த துறைகளில் பணியாற்றும் பலருக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாற்றங்களை விளக்கும்போது, UK உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத், “இந்த நாட்டிற்கு வருபவர்கள் எங்கள் மொழியை கற்றுக்கொண்டு,
சமூகத்திற்கு பங்களிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
இதன் மூலம், UK அரசு புலம்பெயர்வை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சமூக ஒருங்கிணைப்பையும் அதிகரிக்க முயற்சிப்பது தெளிவாகிறது.
இந்த புதிய விதிமாற்றங்கள், 2021 முதல் பிரித்தானியாவிற்கு வந்துள்ள சுமார் 2.6 மில்லியன் புலம்பெயர்ந்தோர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது.
எனவே, பிரித்தானியாவுக்கு வேலை அல்லது குடியிருப்பு நோக்கில் செல்ல திட்டமிடுகிறவர்கள், இந்த மாற்றங்களை முன்கூட்டியே புரிந்து கொண்டு, தங்களது ஆங்கில மொழித் திறனையும் நீண்டகால திட்டங்களையும் கவனமாகத் திட்டமிடுவது மிக அவசியமாகிறது.





