தலைமறைவான நடிகை கஸ்தூரியை பிடிக்க தனிப்படைகள் அமைப்பு
இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பங்கேற்றார். தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவர் கூறிய கருத்து சர்ச்சையானதால், கடும் விமர்சனத்திற்கு உள்ளானார்.
அடுத்த நாளே, செய்தியாளர் சந்திப்பில் தனது கருத்துக்கு மன்னிப்பு கோரினார். எனினும் மதுரை திருநகர், ஆண்டிபட்டி போன்ற பகுதிகளிலும் கஸ்தூரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதேபோல், அகில இந்திய தெலுங்கு சம்மேளன அமைப்பு சார்பில் நடிகை கஸ்தூரி மீது அளித்த புகாரின் அடிப்படையில், கலவரத்தை தூண்டுதல் உட்பட நான்கு பிரிவுகளின் கீழ், சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் விசாரணைக்கு வரும்படி, சம்மன் வழங்கச் சென்றபோது ஆழ்வார்பேட்டையில் உள்ள கஸ்தூரியின் வீடு பூட்டியிருந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், நடிகை கஸ்தூரி தலைமறைவானதாக சொல்லப்பட்டது. மேலும், அவரை எழும்பூர் போலீசார் தேடி வருகின்றனர்.
நடிகை கஸ்தூரி தலைமறைவாக இருப்பதாக தெரிவித்து வரும் நிலையில் அவர் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார். நடிகை கஸ்தூரியின் இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனிடையே நடிகை கஸ்தூரி முன்ஜாமின் மனு தள்ளுபடியான நிலையில் அவரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து மதுரை மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதன் உத்தரவிட்டுள்ளார். சென்னை விரைந்துள்ள தனிப்பைடகள் கஸ்தூரியை பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.