குடிநுழைவு விதிகளை கடுமையாக்கிய ட்ரம்ப்! விசா பெறும் மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

அமெரிக்கா வழங்கும் மாணவர் விசாக்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட கணிசமாகக் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ஒகஸ்டில் மாணவர் விசா அளவுகள் சுமார் 20 சதவீதம் குறைந்திருப்பதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்தாண்டில் அமெரிக்காவில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க அதிகளவான இந்திய மாணவர்கள் சென்றுள்ள நிலையில், புதிய கட்டுப்பாடுகளால் அவர்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனைத்துலக வர்த்தக ஆணையம் வெளியிட்ட புள்ளிவிவரங்களுக்கமைய, 2025ஆம் ஒகஸ்டில் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்கள் 44.5 சதவீதம் குறைந்துள்ளன. இது கடந்த காலத்திலேயே மிகப் பெரிய வீழ்ச்சியாகக் கருதப்படுகிறது.
சீன மாணவர்களும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். கடந்த ஒகஸ்ட் மாதத்தில் சீன மாணவர்களுக்கு 86,000 விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுவும் குறைவான எண்ணிக்கையே என்றாலும், இந்தியர்களுடன் ஒப்பிட்டால் இருமடங்கிற்கு அதிகமாகும்.
விசா குறைபாடுகள் பல்வேறு நடவடிக்கைகளால் தீவிரமாகி உள்ளன. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ருபியோ, இந்த ஆண்டின் தொடக்கத்தில் புதிய மாணவர் விசா நேர்காணல்களை தற்காலிகமாக நிறுத்தியிருந்தார்.
இதனால், இந்திய மாணவர்கள் தங்கள் நாட்டிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்; வேறு நாடுகளில் விண்ணப்பிக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
இவ்வாறான வழிமுறைகள் மற்றும் நீண்ட கால மந்தநிலை காரணமாக, இந்திய மாணவர்களுக்கு விசா பெறும் வாய்ப்பு குறைவாகி, படிப்பை தாமதமாகத் தொடங்கும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது.