அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்க தயாராகும் டிரம்ப் – சர்வதேச மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு
ஜனவரி 20ஆம் திகதி டொனால்ட் டிரம்ப் பதவியேற்பதற்கு முன்னதாக, குளிர்கால விடுமுறைக்குப் பிறகு, சர்வதேச மாணவர்கள் தங்கள் பல்கலைக்கழகங்களுக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பல அமெரிக்க பல்கலைக்கழகங்க வளாகங்களில் அச்சமும் நிச்சயமற்ற தன்மையும் பரவி வருவதாக கூறப்படுகிறது.
டிரம்பின் முதல் பதவிக் காலத்தின் தொடக்கத்தில் மாணவர்கள் வெளிநாடுகளில் சிக்கித் தவித்ததைப் போன்ற மற்றொரு பயணத் தடை குறித்து வதந்திகள் இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
2023-24 கல்வியாண்டில் 1.1 மில்லியனுக்கும் அதிகமான சர்வதேச மாணவர்கள் அமெரிக்க கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ளனர்.
ஆனால் முன்னாள் ஜனாதிபதி வெள்ளை மாளிகைக்கு திரும்பியதும் கடுமையான குடிவரவு கொள்கைகளை பின்பற்றுவதாக ஏற்கனவே உறுதியளித்துள்ளார்.
முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் மீதான அவரது முந்தைய பயணத் தடையை விரிவுபடுத்துவதும், தீவிர அமெரிக்க எதிர்ப்பு மற்றும் யூத எதிர்ப்பு வெளிநாட்டினருக்கு மாணவர் விசாவை ரத்து செய்வதும் இதில் அடங்கும்.
இதன் காரணமாக, குளிர்கால விடுமுறைக்காக பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறிய சர்வதேச மாணவர்கள், டிரம்ப் மீண்டும் பணியைத் தொடங்குவதற்கு முன், தங்கள் கல்வி நிறுவனங்களுக்குத் திரும்ப வேண்டும் என்று சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன.