கிரீன்லாந்தை கைப்பற்ற திட்டங்களை வகுக்கும் ட்ரம்ப் : அதிகாரிகளுடன் ஆலோசனை!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கிரீன்லாந்தை கையகப்படுத்துவது தொடர்பில் திட்டங்களை வகுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தற்போது விரிவான ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இராணுவத்தை பயன்படுத்துவது குறித்தும் இதன்போது விவாதிக்கப்பட்டதாகவும் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
டென்மார்க்கின் அரை தன்னாட்சிப் பகுதியான கிரீன்லாந்தை கையகப்படுத்துவது “தேசிய பாதுகாப்பு முன்னுரிமை” என வெள்ளை மாளிகை பிபிசியிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வெள்ளை மாளிகை நேற்று வெளியிட்ட அறிவிப்பில், இந்த முக்கியமான வெளியுறவுக் கொள்கை இலக்கை அடைய பல்வேறு விருப்பங்களை ஜனாதிபதியும் அவரது குழுவும் விவாதித்து வருகின்றனர், மேலும் அமெரிக்க இராணுவத்தைப் பயன்படுத்துவது எப்போதும் தளபதியின் வசம் உள்ள ஒரு விருப்பமாகும்.” எனத் தெரிவித்துள்ளது.
கிரீன்லாந்து அதன் மக்களுக்கு சொந்தமானது என்றும், டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து மட்டுமே தங்கள் உறவுகள் தொடர்பான விஷயங்களில் முடிவு செய்ய முடியும்” என்றும் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போலந்து, ஸ்பெயின் மற்றும் டென்மார்க் தலைவர்கள் இணைந்து கூட்டறிக்கையை வெளியிட்ட சிலமணி நேரங்களுக்கு பிறகு வெள்ளைமாளிகையின் அறிவிப்பு வந்துள்ளது.





