கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வதில் சிக்கல் : குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு முன் பதற்றம்!
குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் மாத்தறை பிராந்திய அலுவலகத்திற்கு முன்பாக இன்று (13) காலை பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட தாமதமே இதற்குக் காரணம்.
குடிவரவு திணைக்களத்தின் மாத்தறை பிராந்திய காரியாலயத்திற்கு வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை தயாரிப்பதற்காக நாளாந்தம் ஏராளமானோர் வருகின்றனர்.
இந்த அலுவலகத்தில் இருந்து ஒரு நாள் சேவையின் கீழ் சுமார் 150 பேருக்கு வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன.
எனினும் வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்குவதற்கான முறையான முறைமை இல்லாததால் அங்கு வரும் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அந்த அலுவலகம் அருகே பல நாட்களாக நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.
தீவின் பல பகுதிகளிலிருந்தும் வந்த மக்கள் வெளிநாட்டு கடவுச்சீட்டு பெறுவதற்காக இந்த அலுவலகத்திற்கு முன்பாக உள்ள வீதியில் இரவைக் கழிக்க வேண்டியுள்ளது.
பல நாட்களாக அங்கு தங்கியிருந்த மக்களுக்கு வெளிநாட்டு கடவுச்சீட்டு கிடைக்காததால், பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும், அங்கிருந்த மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
குடிவரவு திணைக்களம் தமக்கு குறிப்பிட்ட இலக்கத்தை வழங்கிய போதிலும், அந்த இலக்க வரிசையில் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
அத்துடன், பல நாட்களாக குடிவரவு திணைக்களத்திற்கு முன்பாக சுற்றித்திரியும் இவர்களை புறக்கணித்து பல்வேறு சட்டவிரோத முறைகளில் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வேறு நபர்களுக்கு வழங்குவதாகவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.