நாளை முதல் யாழ்ப்பாணம் – அனுராதபுரம் இடையே மீண்டும் தொடருந்து சேவை ஆரம்பம்
வடக்கு மார்க்கத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த தொடருந்து சேவைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மற்றும் அனுராதபுரத்திற்கு இடையிலான சேவைகள் நாளை (திங்கட்கிழமை) முதல் வழமைக்குத் திரும்பவுள்ளன. நாளை அதிகாலை 6.00 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து அனுராதபுரம் நோக்கிய முதலாவது சேவை ஆரம்பமாகவுள்ளது. அத்துடன், அனுராதபுரத்திலிருந்து காங்கேசன்துறை நோக்கிய தொடருந்து நாளைய தினம் மாலை 2.30 மணிக்குப் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தாண்டிக்குளம் தொடருந்து நிலையத்தில் தற்போது புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், அங்கு தொடருந்துகள் நிறுத்தப்பட மாட்டாது எனவும், பயணிகள் இதனை அவதானத்திற் கொள்ளுமாறும் தொடருந்து திணைக்களம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.





