புத்தாண்டு பொண்டாட்டத்தின் போது நேர்ந்த விபரீதம்… பொலிஸ் துரத்தியதால் கிணற்றில் குதித்த சிறுவன் மரணம்!
பண்ருட்டி அருகே நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பொலிஸ் துரத்தியதால் பயந்து ஓடிய மாணவர்களில் இருவர் கிணற்றில் விழுந்தனர். அதில் பத்தாம் வகுப்பு படித்து வந்த சிறுவன் உயிரிழந்த நிலையில், மற்றொரு சிறுவன் காயத்துடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தை தவிர்க்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்திய நிலையில் கடலூர் மாவட்டம் பண்ரூட்டி அருகில் உள்ள காட்டுவேகாகொள்ளை கிராமத்தில் மாணவர்கள் இணைந்து கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் சத்தம் அதிகமாக இருந்தால் பொலிஸார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட வந்துள்ளனர். அப்போது அங்கு கூடியிருந்த மாணவர்கள் பொலிஸாரை கண்டதும் தெறித்து ஓடியுள்ளனர். பொலிஸாரும் வீட்டிற்கு செல்லும்படி மாணவர்களை துரத்தியுள்ளனர்.
அப்பொழுது பத்தாம் வகுப்பு மாணவர் ஆரியா (15) பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன்(17) ஆகிய இருவரும் தரை கிணற்றுக்குள் விழுந்து விட்டனர். இதில் ஆர்யா உயிரிழந்த நிலையில் தமிழ்ச்செல்வன் காயத்துடன் மீட்கப்பட்டார்.
ஆரியா கடலூரில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். ஆரியா உடலை மீட்ட பொலிஸார் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர்.இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புத்தாண்டு நாளில் சிறுவன் உயிரிழந்துள்ளதால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.