கூட்ட நெரிசலில் சிக்கிய சிறுவனை சந்தித்தார் அல்லு அர்ஜுன்
‘புஷ்பா 2’ சிறப்பு திரையிடலின்போது கூட்ட நெரிசலில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனை நடிகர் அல்லு அர்ஜுன் சந்தித்து நலம் விசாரித்தார்.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம் கடந்த டிசம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. முன்னதாக படத்தின் சிறப்பு காட்சி கடந்த டிசம்பர் 4ஆம் தேதி ஐதராபாத்தில் உள்ள தியேட்டர் ஒன்றில் திரையிடப்பட்டது.
அந்நிகழ்ச்சிக்கு அல்லு அர்ஜுனும் வந்திருந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் பலியான நிலையில் அவரது மகன் காயமடைந்தார். இது தொடர்பான வழக்கில் கைதான அல்லு அர்ஜுன் பின்னர் பிணை பெற்றார்.
இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனை நடிகர் அல்லு அர்ஜுன் சந்தித்தார். சிறுவனின் உடல்நலம் குறித்தும் மருத்துவர்களுடன் கேட்டறிந்தார்.
அவருடன் தயாரிப்பாளர் தில் ராஜுவும் மருத்துவமனைக்கு நேரில் சென்றார். சிகிச்சையில் உள்ள சிறுவனை சில நாட்களுக்கு முன்பு அல்லு அர்ஜுனின் தந்தை நேரில் சென்று சந்தித்த நிலையில் தற்போது அல்லு அர்ஜுனும் சந்தித்தார்.