திருகோணமலையில் கரடி தாக்கி மூவருக்கு நேரந்த கதி!
திருகோணமலையில் ஒரே தடவையில் கரடி மூன்று பேரை தாக்கி காயப்படுத்திய சம்பவமொன்று இன்று (01) பதிவாகியுள்ளது.
திருகோணமலை கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுப் பகுதிக்குள் தேன் எடுப்பதற்காக சென்றபோது கரடி ஒருவரை தாக்கிய சந்தர்ப்பத்தில் மற்றைய இருவரும் அக்கரடியை தாக்க முற்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த கரடி மூன்று பேரையும் தாக்கி காயப்படுத்திய நிலையில் கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனை அடுத்து குறித்த மூவரையும் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
இவ்வாறு கரடியின் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் கோமரங்கடவல -பக்மீகம பகுதியைச் சேர்ந்த ஆர் பிரதீப் சம்பத் (29வயது) பக்மீகம-அடம்பன பகுதியைச் சேர்ந்த சரத் திஸாநாயக்க (46வயது) மற்றும் பக்மீகம- கூட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த கே.நிமலசிறி (38வயது) எனவும் தெரிய வருகின்றது.
தற்போது தேன் எடுக்கும் காலம் கிட்டி உள்ளதால் கரடிகளின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் கடந்த ஒரு மாதத்திற்குள் ஆறு பேர் கரடியின் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாகவும் வைத்தியசாலையின் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.